
திண்டுக்கல்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்தவர் அஜித்குமார் (வயது 27). இவர் மீது மதுரை ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா, நகை திருட்டு புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாக பணியாற்றுகிறார். மேலும் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு பின்னர் அவர் கல்லூரிக்கு வரவில்லை. விடுமுறையில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே பேராசிரியை தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக கடந்த ஆண்டு பேராசிரியை நிகிதா மீது கல்லூரி மாணவிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் பேராசிரியை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர். ஆனால் அந்த புகார் தொடர்பாக பேராசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காவலாளி அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவ விடுமுறை எடுத்துச்சென்று இருந்த பேராசிரியை நிகிதா, சர்ச்சை மற்றும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு வந்தார். பின்னர் வழக்கம்போல் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பது, அலுவலக பணிகளை மேற்கொள்வது என தனது அன்றாட பணிகளை தொடங்கிவிட்டதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.