சர்க்கரை நோய் அலெர்ட் ப்ளீஸ்!

2 days ago 3

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் நாடி நோய் முதல் நாடி

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

காலை பதினோரு மணியளவில் நண்பரொருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, பேச்சு வாக்கில் காலெல்லாம் எரியுது என்றார். பைக்கில் சுற்றிக் கொண்டிருப்பதால், பஸ் அல்லது லாரி எஞ்சின் பக்கத்தில் இருந்து ஒரு வெப்பம் வந்து காலை சுட்டெரிப்பது போல் காலின் எரிச்சல் இருக்கிறது என்றார். அதனால் காலை தடவிக் கொண்டே பேசிட்டு இருந்தார். நானும், சரி பைக்கில் வந்ததால், அப்படியிருக்கும் என்று விட்டு விட்டேன். மறுபடியும் சில நாட்கள் கழித்து, காலின் பாதத்தில் எரிச்சல் அதிகமாகியிருக்கிறது, என்ன செய்வது என்றார். அப்பொழுது தான் புரிந்தது. நானும் உடனே, சுகர் இருக்கிறதா என்று செக் செய்து விடுங்க என்று ஒருசில டெஸ்ட் எடுக்க கூறியிருந்தேன்.

அவரோ, வயது ரீதியாக தனக்கு இப்பவே சுகரா, இருக்காது என்ற நினைப்பில் நான் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதே போல், தான் பெரும்பாலான மக்கள் நோய் உருவாவதற்கான அறிகுறிகளாக உடலில் வெளிப்படும் போது, அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். உடலில் பெரிய பிரச்னை ஏற்படும் போது, கடைசி நேரத்தில் வந்து உடம்பை சீக்கிரமாக சரி செய்து விடுங்கள் என்று மருத்துவரை அவசரப்படுத்துவார்கள். வீட்டில் தன்னை நம்பி இத்தனை உறவுகள் இருக்கிறார்கள் என்றும், நிறைய கமிட்மென்ட் தனக்கு இருக்கிறது என்றும் அழாத குறையாக கூறுவார்கள்.

உதாரணமாக, பிரஷர் அதிகமாக இருக்கும் போது, பின்னங்கழுத்தின் மேல்பகுதி தலையில் வலி அதிகமாக இருக்கும். அப்படி தொடர்ச்சியாக வலி இருக்கும் போது, பிரஷர் இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து விடுவது நல்லது.அதேபோல், இன்றைக்கு சர்க்கரை வியாதியால் பலரும் பலவித ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எங்கு தங்களை கவனிக்க மறந்து விடுகிறார்கள் என்றால், அவர்கள் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பொருட்படுத்தாமல் இருக்கும் போது மட்டுமே, பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால், சர்க்கரை வியாதியின் அறிகுறிகளைப் பற்றி நாம் முதலில் தெரிந்துகொள்ளலாம்.

வெயில் காலம் என்பதால், நமக்கு பெரும்பாலும் தண்ணீர் தாகம் இருப்பது இயல்பானது. ஆனால், சிலருக்கு அளவுக்கு மீறி தண்ணீர் தாகம் இருக்கும். அதனால் அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி தண்ணீர் குடிப்பதால், சிறுநீரும் அடிக்கடி வெளியேறும். இதனால் தான், சர்க்கரை வியாதிக்கு நீரிழிவு நோய் என்று பெயர் ஏற்பட்டது. இந்த
அறிகுறியை மக்கள் இயல்பாக, தண்ணீர் தாகம் ஏற்படுகிறது, அதனால் குடிக்கிறேன் என்று கடந்து விடுகிறார்கள். எதுவுமே ஒரு அளவிற்குள் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அடுத்தபடியாக பசி அதிகமாக இருக்கும். பசித்த உடனே சாப்பிடவில்லை என்றால், மயக்கம் வருவது போல் இருக்கும் அல்லது மயங்கி விடுவார்கள். பசியால் சோர்வாக இருப்பது அல்லது பசியை பொறுக்க முடியாமல் இருந்தாலும், உடனடியாக மருத்துவரைப் பார்த்து விடுவது நல்லது. அடுத்தபடியாக எடை குறைவது. ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பார்கள், சில மாதங்களில் உடல் எடை தானாக குறைந்து விடும். அதுவும் அவர்களுக்கு புரியாது. உடல் எடை தானாக குறைவதை சந்தோஷம் என்று எடுக்க முடியாது. சர்க்கரை வியாதியின் தாக்கமாக கூட இருக்கலாம்.

இப்படியாக, தாகம் அதிகமாக எடுப்பது, பசி அதிகமாக இருப்பது, சிறுநீர் அடிக்கடி வெளியேறுவது, எடை குறைவது போன்ற நான்கு அடிப்படையான அறிகுறிகளால் சர்க்கரை வியாதியின் தன்மையை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதில் ஏதோவொன்று, உடலில் தென்பட்டாலும் கூட, மருத்துவரை உடனடியாக சந்தித்து விடுவது நல்லது. சர்க்கரை வியாதி என்று முதலிலே தெரிந்து விட்டால், அதற்கான அடிப்படை சிகிச்சை முறைகளிலேயே மருத்துவரின் ஆலோசனைப்படி நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

இவை அனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும். இது தவிர, சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்றால், முதலில் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். அதாவது சிறிய ரத்த நாளங்கள் (நுண்குழல்) மற்றும் பெரிய ரத்த நாளங்கள் இரண்டுமே பாதிக்கப்படும். நுண்குழல் என்று சொல்லக்கூடிய சிறிய ரத்த நாளங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கிட்னி மற்றும் நரம்புகள் எளிதாக பாதிப்பிற்கு உள்ளாகும். கண்ணிற்கு ரெட்டினோபதி என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

அதாவது, சர்க்கரையால் கண் பாதிப்பிற்கு மருந்து எடுக்காமல் இருக்கும் போது, பார்வையை இழக்க நேரிடும். மேலும், கிட்னி பாதிப்பிற்கு நெப்ரோபதி என்பார்கள். அதாவது, சர்க்கரையால் கிட்னி பாதிப்புக்குள்ளாகும் போது, சிறுநீருடன் புரோட்டீன் வெளியேற ஆரம்பிக்கும். மேலும், நரம்பின் பாதிப்பை நியோரோபதி என்பார்கள். நரம்பு பாதிப்படையும் போது, காலின் பாதத்தில் எரிச்சல் வரும், அடுத்தபடியாக கைகளிலும் எரிச்சல் வரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் நுண்குழல் பாதிப்பால் ஏற்படக்கூடியவை.

அடுத்தபடியாக, பெரிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்வோம். அதாவது, இருதய நோய், இருதய வலி, பக்கவாதம் போன்றவை எல்லாம் சர்க்கரை வியாதியால் பெரிய ரத்தநாளங்களில் ஏற்படும் பாதிப்பினால், மற்ற பெரிய நோய்களுக்கும் ஆளாகிறோம். இவையெல்லாம் சர்க்கரையால் உடலில் ஏற்படும் பாதிப்புகளாகும். மேலும் காலில் அல்சர் வரலாம். தொற்று நோய்களான யூரின் இன்பெக்சன், தோலில் இன்ஃபெக்சன் ஏற்படுகிறது.

சரக்கரை வியாதி ஒரு மெட்டோபாலிக் பிரச்னையாக இருப்பதால், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. பெரும்பாலும் மக்கள், இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல், பாதிப்புகளால் இன்னல்களுக்கு ஆளான பின் தான், மருத்துவரைச் சந்திக்க வருகிறார்கள். மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தவுடன் சர்க்கரை நோய்க்கான டெஸ்ட் முறையாக எடுக்க வேண்டும்.

மேலும், சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதற்கு, சில டெஸ்ட்கள் எடுக்க வேண்டும். அதாவது, வெறும் வயிற்றில் ஒரு தடவையும், சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கடந்த பின் எடுக்கக் கூடிய டெஸ்ட் மற்றும் ஆவேர்ஜ் கண்ட்ரோல் சுகர் (HbA1c) என்று சொல்லக்கூடிய மூன்று மாதத்திற்கு ஒரு முறை எடுக்கக்கூடிய டெஸ்ட் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை மருத்துவரால் உறுதிப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, பாதிப்புகளையும் நாம் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான், டைப்2 சர்க்கரை வியாதி கண்டுபிடித்தவுடன், நெப்ரோபதியில் கூறப்படும் டெஸ்ட்டில் யூரினில் ப்ரோட்டீன் வெளியேற்ற அளவை வைத்தும், நியோரப்பதியில் காலில் உள்ள நரம்பின் டெஸ்ட் மூலமாகவும், ரெட்டினோபதியில் கண் பார்வை சம்பந்தமான டெஸ்ட் மூலமாகவும் சர்க்கரை வியாதியின் பாதிப்புகளுக்கான சிகிச்சையையும் முறையாக எடுக்க வேண்டும். மேலும் சர்க்கரை வியாதியில் ஏற்படும் பாத நரம்பு டெஸ்ட் இலவசமாக எடுப்பதற்கு, தமிழக அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் மக்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக் அப் எடுத்துப் பார்த்துக் கொள்வது நன்மையானதும் கூட.

மேலும் சிலர், சர்க்கரை வியாதிக்கு மருந்து எடுப்பதால், பிரஷர் மற்றும் தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். மருத்துவர் இந்த டெஸ்ட் எல்லாம் எடுங்க என்று சொன்னால், சர்க்கரை வியாதிக்கு தானே சிகிச்சைக்கு வந்திருக்கிறேன், அதன் பின் ஏன், இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்விகள் கேட்க ஆரம்பிப்பார்கள். கேள்விகள் கேட்கும் போது, ஒரு தெளிவான பதிலைக் கூற முடியும். ஆனால், சிலர் எதற்கு வந்திருக்கிறமோ, அதை மட்டும் சரி செய்வோம் என்ற ரீதியில் இருப்பார்கள். நமது உடல் ஒன்றும் வண்டி ஓட்டும் வாகனமல்ல. டயர் பிரச்சனை என்றால், டயரை மட்டும் சரி செய்வதற்கு நமது உடல் ஒன்றும் வண்டி ஓட்டும் வாகனமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித உடல் அகமும், புறமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. அதனால் உடல் என்பது நாம் வெளியே பார்ப்பது மட்டுமல்ல. நம் உடல் உள்ளே, வெளியே என்று எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் உடலில், பிரஷரும், தைராய்டும் இருக்கும் போது, சர்க்கரைக்கு மட்டும் சிகிச்சை எடுத்தால், பிரஷரால் ரத்தநாளங்களில் சில தடைகள் உண்டாகும்.

அதனால், சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை எடுத்தாலும், சர்க்கரை சரியான விகிதத்திற்கு வராமல் போகும். இதனால் மக்கள் என்ன தான், சர்க்கரை மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டாலும், உடலில் மெட்டாபாலிக் சார்ந்த மற்ற தொந்தரவுகள் ஏற்படத்தான் செய்யும். அதனால் தான், சர்க்கரை வியாதியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, உடலில் சர்க்கரை வியாதியால் ஏற்படும் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் வலிகளையும் உணர்ந்து, உடனே சிகிச்சை எடுத்து விடுங்கள். நம் உடலுக்கு நாம் தான் எஜமானர். அதில் என்ன தொந்தரவு வந்தாலும், அதை சரி செய்வதே நமது கடமையாகும்.

The post சர்க்கரை நோய் அலெர்ட் ப்ளீஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article