சரணாகதியே ஒரே வழி!

6 hours ago 4

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“நன்றே வருகினும்‌, தீதே விளைகினும்‌, நான்‌ அறிவது
ஒன்றேயும்‌ இல்லை, உனக்கே பரம்‌ எனக்‌ குள்ளவெல்லாம்‌
அன்றே உனதென்‌ றளித்துவிட்டேன்‌; அழியாதகுணக்‌
குன்றே! அருட்கடலே! இம வான்பெற்ற கோமளமே!’’
– தொண்ணூற்றி ஐந்தாவது அந்தாதி
“ஆதியாக”கடவுளின் அருளைப் பெற அனைவரும் ஆசைப்படுகின்றோம். ஆனால், அது எளிமையாக நமக்கு கிடைப்பதில்லை. மிகுந்த தவம் செய்து இடையீடற்ற கடுமையான முயற்சி செய்து, ஜபம் செய்து, பூஜை செய்து இறையருளைப் பெற்ற குருவை நாம் எளிதில் சந்திக்கலாம். அவரிடத்தில் கடவுளைப் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். நமக்கு தகுந்தாற்போல் ஓர் எளிய வழியை அவர் காட்டுவார். அதை நாம் இறுக்கப் பிடித்து அவர் சொன்ன வழியில் சிறிதும் மாறாமல் பின்பற்றி இறையருளைப் பெற்றுவிடலாம் என்கிறார் பட்டர்.

என்றாலும், எதிர்பாராத சில தீய விளைவுகள், சீடனாகிய நம் அலட்சியத்தினாலோ தவறுகளினாலோ தோன்றினால், உடனே குருவிடத்தில் சென்று தீய விளைவுகளை மாற்றி நல்ல விளைவுகளை அனுபவமாக பெறலாம். ஆகையால் அபிராமிபட்டர் குருவையே சரணடைந்து அவர் வாக்கையே முழுவதுமாய் நம்பி முயற்சி செய்தால் கண்டிப்பாக உபாசனையில் முன்னேறலாம். வழிபாட்டால் அருள் பெறலாம் என்ற வேதாகமங்கள் குறிப்பிடுகிற உண்மையை நமக்கு இந்த பாடலின் மூலம் அறிவித்து நன்மை செய்ய கன்னியான பார்வதியை வேண்டுகிறார். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

} நன்றே வருகினும்
} தீதே விளைகினும்
} நான் அறிவது ஒன்றேயும் இல்லை
} உனக்கே பரம்
} எனக்கு உள்ள எல்லாம்
} அன்றே உனதென்று அளித்து விட்டேன்
} அழியாத குணக்குன்றே
} அருட்கடலே
} இமவான் பெற்ற கோமளமே
இவ்வரிசையின் வழி பாடலின்
விளக்கத்தை இனி காண்போம்.
“நன்றே வருகினும்”

என்ற சொல்லால் பூசனையின் விளைவை குறிப்பிடுகிறார். ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதனாலேயோ வீட்டிற்குள்ளேயே வழிபாடு செய்வதனாலேயோ ஆசாரங்களைக் கடைப் பிடிப்பதனாலேயோ ஏற்படும் பொதுவான பயனை இங்கே குறிப்பிடவில்லை. சிறப்பாக உபாசனையில் புறச்சரணங்கள் என்னும் பூஜா, தீக்ஷா, தியானம், ஜபம், ஹோமம், உபாசனை தேவாலய தரிசனம் என்ற செயல்களை ஆரம்பிக்கும் போதும் பயிற்சிகளைச் செய்யும் போதும் விளையும் பயனையே இங்கு “நன்றே வருகினும்” என்கிறார்.

ஒரு உதாரணத்தால் அதைப் புரிந்து கொள்வோம். உபாசனைக்கு முதலில் முக்கியம் தீட்சையாகும். சீடனுக்கு தீட்சை எடுத்து வைக்கும் போது சில நல்ல சகுனங்கள் தோன்ற வேண்டும்.
அதைப் பின்பற்றித்தான் தீட்சையினால் பயன் பெறுவான் என்பதை சகுனம், சொப்பனம் [கனவு] போன்ற அறிகுறிகளாலும் சீடனின் நடத்தையாலும் உபதேசம் செய்து வைக்கும் குருமார்கள் கண்டறிவார்கள். இதை சாஸ்திரம் `ஏகா சரணம்’ என்கிறது.

தீபம் ஏற்றுதல், மாமிசத்தை உண்ணுதல், இறந்த பிணங்களை சேமித்து வைத்தல், தாமரை மலர்தல், வயிற்றில் புல் முளைத்தல் போன்ற ஆகமத்தில் கூறப்பட்டுள்ள கனவுகள் தோன்றினால், அதுவே நல்ல சகுனம். அப்படி தோன்றாவிட்டால் சீடனுக்கு தீட்சை அளிக்கும் சடங்கைத் தள்ளி வைப்பர். மேலும் சீடனின் ஆர்வம் பற்றி, குருவிற்குத் தொண்டு செய்வதில் மகிழ்ச்சி குருவையும் குருவை சார்ந்தவர் இடத்து மதிப்பு, குரு கடிந்துகொண்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு இன்முகம் காட்டி அவர் சொன்ன செயலை செய்து முடிக்கும் பண்பு இவையும் உபாசனைக்கான நல்லடையாளங்கள்.

குருவானவர், சீடனுக்குப் பாடம் உபதேசித்துக் கொண்டிருக்கையில் குருவின் குருவருதல் [பரமகுரு] ஆலயத்திலிருந்து இறைவன் உலா வருதல், கல்யாணச் செய்தி வருதல் போன்ற சகுனங்களை பார்த்து அதன் மூலமாகவும் இந்த சீடனுக்கு உபதேசிக்கும் மந்திரத்தால் பயன் ஏற்படுவதன் அளவை அறிந்து கொள்ள முடியும். அது சார்ந்து உடனடியாக எந்த மந்திரம் கொடுக்க வேண்டும் என்பதையே பட்டர் இங்கே “நன்றே வருகினும்’’ என்கிறார்.

“தீதே விளைகினும்” கனவில் விளக்கை ஏற்ற முயன்று அது அணைந்தாலும், சீடன் பெண்கள், தாய், தந்தையாருடன்கூடி மகிழ்ந்தாலும், சைவ உணவுகளை மிகுதியாக பூசித்தாலும், காய்ந்து வாடிய மலரைப் பார்த்தாலும், வயிற்றில் புழுக்கள் முதலியன நெளிந்தாலும், காசுகளை மிகுதியாக சேமித்து வைத்தல் போன்ற கனவுகள் வந்தால் தீட்சையை தவிர்த்து விடுவர். சீடனின் ஆர்வமின்மை, சீடனின் அதிக நேரத் தூக்கம், அதிக உணவு உண்ணுதல், சொன்ன காரியத்தை தவறுபடசெய்தல், செய்யாமல் காலதாமதம் செய்தல், ஆச்சாரியாரின் கோபத்திற்கு அஞ்சி அவரை விட்டு விலக நினைத்தாலும், அவரை மறைமுகமாக தூசித்தாலும், பொய் சொன்னாலும், சொன்ன செயலை செய்யாததற்கு புதிதான காரணங்களை கற்பித்தாலும், உலகியல் பொருட்களில் அதிகமாக நாட்டம் இருந்தாலும், உடலில் ஊனமுற்றிருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தீட்சையை தவிர்த்துவிடுவர்.

குரு பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது சீடன் தூங்கினாலோ, கொட்டாவி விட்டாலோ, மரணச் செய்திகள் வந்தாலோ, குருவுக்கு பிடிக்காதவர், எதிரிகள் வந்தாலோ தீட்சையைத் தவிர்த்துவிடுவர். இதையே பட்டர் “தீதே விளைகினும்’’ என்கிறார். உலகியலில் வழிபாட்டினால் தீது ஏற்படாது நன்மையே ஏற்படும் என்ற மரபு இருக்க “தீதே விளைகினும்’’ என்ற வார்த்தையை பட்டர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், அது தீக்ஷா நெறியில் சீடனின் மனப்பக்குவத்தை அறியவும். தேவதையின் அருளை அறிய முயலும் பகுதியிலே ஆகமங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில்தான் தீமையானது குறிப்பிடப்பட்டிருக்கும். இது உபாசகனுக்கு மட்டுமே அதுவும் தீட்சை எடுக்கும்போதே இச்சொல் பயன்படுத்துகிறது. சாதாரண பக்தனை இச்சொல் குறிப்பிடவில்லை என்பதையே “தீதே விளைகினும்” என்கிறார்.

“நான் அறிவது ஒன்றேயும் இல்லை”என்பதனால் சீடனின் தன்முனைப்பு அற்ற பண்பையே இச்சொல்லால் குறிப்பிடுகிறார். மேலும், குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரங்களை சரிவரக் கற்று குற்றங்களை நீக்கி சாத்திரங்களின் நுட்பப் பொருள் உணர்த்தும் குருவைப்பற்றி நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்துதான் பொருள் புரிந்து அனைத்தையும் அறிந்து கொண்டதையும் ஆசிரியருக்கு அறிவித்தலின் பொருட்டு சில சந்தேகங்களை கேட்பான்.

அப்படிக் கேட்க வேண்டும் என்று குருமார்கள் எதிர்பார்ப்பார்கள். இரண்டு முரண்பாடான பண்புகளைக் கொண்டவராகவோ சீடனின் முன் தன்னை அறிவித்துக் கொள்வார்கள். அப்பொழுது அவன் அதை கவனிக்கிறானா, அது தொடர்பான கேள்வியைக் கேட்கிறானா என்பதைக் கொண்டு தெரிவு செய்வார்கள், அப்பொழுது கேட்கும் முறை, விளக்கம் பெறும் முறை, விளக்கும் முறை, பிறருக்கு விளக்கும் முறை இவற்றை கூர்ந்தாய்வு செய்வார்கள்.

அந்த வகையில் கேட்டது, கேட்டதன் வழி சிந்தித்தது, அதன் வழி நடந்தது, நடந்ததன் வழி அனுபவம் பிறந்தது இவை எல்லாம் ஒரு நேர்க்கோட்டின் வழி உள்ளதா என்பதையே “நான் அறிவது ஒன்றேயும் இல்லை’’ என்கிறார்.தன் முனைப்பு அற்று குருவின் சொற்களாலேயே அறிந்தும் புரிந்தும் இங்ஙனம் வினவுகிறார். தெளிவு பெற ஆர்வம் கொள்கிறேன் என்று சேவை செய்து குரு மனம் கோணாமல் கேட்கின்ற அந்த பாங்கையே தேவதையின் அருள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையே குருவின் மீது கோபம் கொள்ளாமல் குருவாக்கின் மீது நம்பிக்கை கொண்டு தன் செயலின் இழிவு கருதி பணிவுடன் இருப்பதையே “நான் அறிவது ஒன்றையும் இல்லை’’ என்கிறார்.“உனக்கே பரம்”“பரம்” என்ற சொல்லானது அபிராமிபட்டரால் உடல், கடவுள், கவசம், செயல், தனிமை, பழமை, முற்றும் துறத்தல், முன்பு, வீடுபேறு, மேலிடம் போன்ற பத்து பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

‘உடம்போடு’ (89) ‘சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே’ (41) என்பதனால் உமையம்மையை குருவாகவும் ‘மதிமயங்கேன்’ (92) ‘பன்னியது என்றும் உன்தன்’ (6) என்பதனால் செயலையும் ‘தன்னந்தனி இருப்பார்க்கு’ (53) என்று தனிமையையும் ‘அழியாமுத்தி’ (10) என்பதனால் வீடு பேற்றையும் ‘முன் செய் புண்ணியமே’ (40) என்று முன்பு என்ற சொல்லையும் ‘சரணம் சரணம்’ (51) என்பதனால் முற்றும் துறத்தலையும் என்று சொற்களின் பொருள் சார்ந்தே “பரம்’’ என்ற சொல்லை நோக்குவோம். இங்கு ‘`உனக்கே’’ என்பது குரு வடிவில் தோன்றும் உமையம்மையையே குறிக்கும். கடவுளாகத் தோன்றும் உமையம்மையை குறிக்காது கடவுளுக்கும் குருவிற்குமுள்ள வேறுபாடானது கண்முன் தோன்றுவது குரு, கண்முன் தோன்றாதது கடவுள்
என்பதையே “உனக்கே பரம்’’ என்கிறார்.

மேலும், இச்சொல்லானது தன்னைவிட மேன்மையான குருவின் உபதேசத்தை கேட்டுத்தான் தனியாய்க் கடவுளை நோக்கி உடலினால், உள்ளத்தினால், விரதம், மந்திரம், ஜபம், யோகாப்யாசம் முதலியன செய்து தனக்கான பாதுகாப்பை பழமையான சாத்திரங்களின் வழி பின்பற்றுவதனால் தோன்றும் விளைவாக உபாசகனுக்கு உலகியல் மற்றும் உடல், உள்ளம் சார்ந்த இயல்புகளால் ஏற்படும் ஆன்ம உணர்வை தடை செய்கிற பண்புகளான காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்ய போன்ற இயல்புகளிலிருந்து சாத்திராப்யாசம் அவனை விடுவிக்கிறது.

உடல் மேல் உள்ள பற்று, பசி, தூக்கம் இந்திரியங்கள் வசப்படாமை, நோய் போன்ற துன்பத்திலிருந்து உபாசனையானது கவசம் போல் காக்கின்றது. அதற்கு மேலும் தோன்றும் குரு பக்தியினாலே தேவதையின் அருள் கிட்டும் என்பதனாலேயே குருவாக உமையம்மையை நினைத்தே “உனக்கே’’ என்றும் “பரம்’’ என்பதனால் குரு சொன்ன வழி பெற்ற அனுபூதியையும் சேர்த்து “உனக்கே பரம்’’ என்கிறார்.

“எனக்கு உள்ள எல்லாம்”
கடவுளை அறிய சில வழிகளைப்
பரிந்துரை செய்கிறார் பட்டர்.

} கடவுளைப் பற்றி அறிந்து கொள்வது.
} கடவுள் மீது அன்பு செலுத்துவது.
}கடவுளைக் குறித்து சில ஒழுக்கங்களை பின்பற்றுவது.
} கடவுளை அடைய இடைவிடாது முயற்சிசெய்வது.
} கடவுளை அனுபவத்தில் அடைய முயற்சி செய்வது.
} தன் அனுபவத்தின் வழி கடவுளைப் பிறருக்கு நேரடியாக உணர்த்துவது.
} தனக்குரிய எல்லாவற்றையும் உமையம்மையினிடத்து அர்ப்பணித்துவிடுவது.

கடவுளை அறிய உதவும் இந்த வழிகளில் சரணாகதி மார்க்கத்தையே “எனக்கு உள்ள எல்லாம்’’ என்பதனால் குறிப்பிடுகிறார். “எனக்கு உள்ள எல்லாம்” என்று எதை குறிப்பிடுகிறார்? அபிராமி பட்டரின் ஆவியாகிய உயிர், உடல், உடல் சார்ந்து வந்த உடைமை, அவர் ஈட்டிய பாவ புண்ணியம் இவை எல்லாவற்றையுமே “எனக்கு உள்ள எல்லாம்’’ என்கிறார். மேலும், எனக்குரிய இன்ப துன்ப உணர்வுகளையும் வெட்கம், மானம் போன்ற உணர்வுகளையும், உபாசனையினால் தான் பெற்ற தவப் பலனையும் சேர்த்தே “எனக்கு உள்ள எல்லாம்’’
என்கிறார்.

`‘காயேன வாசா, மனசேந்திரிர்வா,
புத்யாத்மனாவா, ப்ரக்ருதே தேசுபாவாத்
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை,
நாராயணாயேதி சமர்ப்பயாமி’’

உடலால், வாக்கால், மனதினால், இந்திரியத்தினால், புத்தியினால், ஆன்மாவினால் இவைகளின் இயற்கையான பண்புகளால் எதை எதைச் செய்தேனோ அனைத்தையும் “எனக்கு உள்ள எல்லாம்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post சரணாகதியே ஒரே வழி! appeared first on Dinakaran.

Read Entire Article