திருவாரூர், ஜன. 25: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டி.ஆர்.ஓ சண்முகநாதனிடம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர்.மாவட்ட தலைவர் தம்புசாமி மற்றும் பொறுப்பாளர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சம்பா சாகுபடியானது முழு வீட்டில் நடைபெற்றது. ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த சம்பா பயிர்கள் முற்றாத நிலையில் பல்வேறு இடங்களில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி சாய்ந்தது பாதிக்கப்பட்டன.
அதன் பின்னர் விவசாயிகளின் பெரும் முயற்சி காரணமாக பயிர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் எதிர்பாராமல் மீண்டும் பெய்த மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் சாய்ந்துள்ள நிலையில் இயந்திரங்களை கொண்டு பயிர்களை அறுவடை செய்வதற்கு கூடுதல் நேரம் ஏற்படுவதுடன் மணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. அவ்வாறு கூடுதல் தொகை கொடுத்து அறுவடை செய்தாலும் குறைந்த அளவிலான மகசூல் தான் கிடைத்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சம்பா அறுவடைப்பணி தீவிரம் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ₹35 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் appeared first on Dinakaran.