சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

4 months ago 16

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த இடத்தில் இதற்கு முன் ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டும் எனவும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24-ந்தேதி அதிகாரிகள் 2-வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு கடந்த 4-ந்தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் காரில் புறப்பட்டனர்.

ஆனால் அவர்களை காசிபூர் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் டெல்லி திரும்பினர். சம்பல் மாவட்டத்திற்கு தனியாக செல்லவும் தயாராக இருந்ததாகவும், ஆனால் போலீசார் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இந்த நிலையில், சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தள்ளது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.

Read Entire Article