சமூகநீதி மண்ணில் வன்னியர் இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள்: டாக்டர் ராமதாஸ்

2 weeks ago 3

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10.50 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்னிய மக்களுக்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத துரோகத்தை செய்து விட்டு, அதை மறைப்பதற்காக இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதை சமூகநீதி ஈகியரே ஏற்க மாட்டார்கள். வன்னியர்களுக்கு தாம் இழைத்து வரும் துரோகத்தை மறைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் திரைச்சீலை தான் மணிமண்டப திறப்பு விழா என்ற நாடகமாகும்.

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்பின் இன்றுடன் 1034 நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மூன்றாண்டுகளாக நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேற்கொள்ளாத முயற்சிகள் எதுவும் இல்லை.

திமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அக்கட்சியின் வெற்றிக்கு வன்னியர்கள்தான் காரணமாக இருந்து வருகின்றனர். ஆனால், அதற்கான நன்றியுணர்வு கொஞ்சமும் இல்லாமல், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வன்னியர்கள் கல்வியறிவோ, வேலைவாய்ப்போ பெற்று முன்னேறிவிடக்கூடாது; வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு அடிமையாகி திமுகவுக்கு வாக்களிக்கும் எந்திரங்களாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி கருதுகிறது. வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பதற்கு இதுதான் முதன்மைக் காரணமாகும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும், சமூகநீதி கோட்பாட்டின்படியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி. அதுதான் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு செய்யப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும். அதைவிடுத்து, அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் மணி மண்டபத்தை மட்டும் திறப்பது நாடகமாகத்தான் இருக்கும். இதை அவர்களின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான அறிவிப்பை விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள இடஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை உடனடியாக பெற்று விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article