சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

3 hours ago 1

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கடந்த 2 தினங்களுக்கு முன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குவாரி உரிமையாளர், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் முழுவிவரம்:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது58). இவர் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராகவும், திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு எதிராக புகார்கள் தெரிவித்தும், மக்களை திரட்டி போராட்டமும் நடத்தியவர்.

மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி, அவரது கிராமத்தின் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வந்தபோது சாலையில் எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜகபர் அலியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல் குவாரிகளுக்கு எதிராக புகார் தெரிவித்து வந்ததில், அவரை கல் குவாரி உரிமையாளர்கள் ஆத்திரத்தில் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என, கல் குவாரி உரிமையாளர்களின் பெயர் மற்றும் லாரி உரிமையாளரின் பெயர்களை குறிப்பிட்டு ஜகபர் அலியின் 2-வது மனைவி மரியம் (37) திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையில் ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக மினி லாரியின் உரிமையாளரான திருமயத்தை சேர்ந்த முருகானந்தம் (56) திருமயம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவாிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்தது விபத்து அல்ல, கல்குவாரி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

போலீசாரின் புலன்விசாரணையில் மினி லாரியை ஓட்டி வந்தது ராமநாதபுரத்தை சேர்ந்த காசிநாதன் (45) என்பதும், கல் குவாரி உரிமையாளரான திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியை சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28), மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமையா தலைமறைவாகினார்.

இதற்கிடையில் கைதான 4 பேரையும் திருமயம் கோர்ட்டில் நீதிபதி கோபால கண்ணன் முன்பு போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து கைதான 4 பேரையும் 15 நாள் காவலில் வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article