
டெல்லியில் ஆயிரத்து 8 சமஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று கூறிய அமித்ஷா, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "இதைத்தான் நாங்களும் வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் மத்திய மந்திரி அமித்ஷா.
இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். "வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.