
சென்னை,
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், 'கப்பல், மேயாத மான்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'பெருசு' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து நடிகர் வைபவ், 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இதில் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.