சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.