சபரிமலையில் மண்டல காலத்தில் தரிசனத்திற்கு தினசரி ஆன்லைன் முன்பதிவு 70 ஆயிரமாக குறைப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

1 month ago 5

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல காலத்தில் தினசரி தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், உடனடி முன்பதிவு கிடையாது என்றும் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கேரள அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உடனடி முன்பதிவு வசதியை ஏற்படுத்தக் கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்திலும் குதித்தன.

இதைத் தொடர்ந்து கேரள அரசு தன்னுடைய முடிவை வாபஸ் பெற்றது. இந்நிலையில் மண்டல காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி ஆன்லைன் முன்பதிவு 70 ஆயிரமாக குறைக்கப்பட்டது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்லும் வழியையும் பக்தர்கள் தேர்வு செய்யலாம் என முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பம்பை, மரக்கூட்டம் வழியாக செல்வதற்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. எருமேலி வழியாக செல்ல முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

* ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு

சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் புதிய மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு 25 பேரும், மாளிகைப்புரத்திற்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இன்று காலை 7 மணியளவில் சபரிமலை சன்னிதானத்தில் வைத்து மேல்சாந்திகள் தேர்வு நடைபெறும். இதில் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுபவர்கள் கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலையில் பூஜைகளை தொடங்குவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.

இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று முதல் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.மறுநாள் 31ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

The post சபரிமலையில் மண்டல காலத்தில் தரிசனத்திற்கு தினசரி ஆன்லைன் முன்பதிவு 70 ஆயிரமாக குறைப்பு: பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article