திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடந்தது. நாளை வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்திருந்த மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று முன்தினம் நடந்தது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் கடந்த 12ம் தேதி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை 6.35 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. கோயில் கொடிமரம் அருகே கேரள அமைச்சர் வாசவன், தமிழக அமைச்சர் சேகர்பாபு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் ஆகியோர் தலைமையில் திருவாபரணத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தந்திரி கண்டரர் ராஜீவரர், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் திருவாபரணத்தை ஏற்று வாங்கி கோயிலுக்குள் கொண்டு சென்றனர். தொடர்ந்து 6.44 மணியளவில் ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் பொன்னம்பலமேட்டில் முதல் மகரஜோதி தெரிந்தது.
அதைப் பார்த்ததும் சபரிமலையை சுற்றிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை மகரஜோதி தெரிந்தது. சன்னிதானம், பாண்டித்தாவளம், புல்மேடு உள்பட 10 இடங்களில் ஜோதியை பார்ப்பதற்காக பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பல நாட்கள் விரதம் இருந்து ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்த மகிழ்ச்சியில் தங்களது ஊர்களுக்கு திரும்பினர். முன்னதாக நேற்று முன்தினம் உச்சிகால பூஜைக்குப் பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட வில்லை. மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் இரவு 7 மணி முதல் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாளை வரை திருவாபரணம் அணிவிக்கப்பட்ட ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். 18ம் தேதியுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் (20ம் தேதி) காலை 6.45 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.
* 19ம் தேதி வரை ஆன்லைன், உடனடி முன்பதிவு வசதி
சபரிமலையில் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பை, நிலக்கல், எருமேலி பந்தளம் மற்றும் வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு வசதி உள்ளது. வரும் 19ம் தேதி இரவு வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்பதால் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வசதியை 19ம் தேதி வரை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The post சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.