சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை

8 hours ago 1

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, இந்தியாவில் அமர்நாத் மற்றும் சார் தாம் யாத்திரை ஆகிய யாத்திரிகளுக்காக இந்திய வானிலை ஆய்வு மையம் பிரத்யேக வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருவது போல், சபரிமலைக்கும் பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என பட்டணம்திட்டா மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது.

சபரிமலை யாத்திரை பாதையில் ஏற்படக்கூடிய திடீர் மழைப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகவும், சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பை வழங்க இந்திய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபப்ட்டது.

இந்த நிலையில், சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு செய்யும் முறையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் 3 மழை அளவீட்டுக் கருவிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவியுள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படும் எனவும், விரைவில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோடை காலத்தின்போது அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் வறட்சியை கருத்தில் கொண்டு, அந்த பகுதியில் வெப்பநிலை அளவீட்டு கருவிகளை நிறுவவும் இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை பட்டணம்திட்டா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பிலும் வானிலை அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் உதவிக்காக சமீபத்தில், 'சுவாமி ஏ.ஐ. சாட் பாட்'(Swamy AI Chat Bo) என்ற வானிலை முன்னறிவிப்பு செயலியை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் வானிலை அறிவிப்புகளை வழங்கும் வகையில் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article