சபரிமலை கோவிலில் பங்குனி திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு இன்று ஆராட்டு

1 week ago 1

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் (தமிழ், மலையாள) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி, சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடைபெற்றது.

விழா நிறைவாக 10-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆராட்டு பலி, தொடர்ந்து சன்னிதானத்தில் இருந்து ஆராட்டு ஊர்வலம் புறப்படுகிறது. பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு சாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து சன்னிதானம் புறப்படுதல், சாமி ஊர்வலம் சன்னிதானம் வந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

அதைதொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ந்தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக விஷூ பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை சிறப்பு பூஜை, கனி காணல் சடங்கு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு விஷூ கை நீட்டமாக, நாணயங்களை தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் வழங்குகிறார்கள். விழாவையொட்டி சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள அரசின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலையில் அய்யப்பன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க டாலர்கள் விஷூ தினத்தன்று வினியோகம் தொடங்கப்படுகிறது. டாலருக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் டாலர்களுக்கு முன்பதிவு செய்யலாம். டாலர்கள் 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் உள்ளிட்ட பல்வேறு எடைகளில் கிடைக்கின்றன. 2 கிராம் தங்க டாலரின் விலை ரூ.19,300-ம், 4 கிராம் டாலர் ரூ.38,600, 8 கிராம் டாலர் ரூ.77,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சன்னிதானம் நிர்வாக அலுவலகத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டாலர்களை பெற்றுக்கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Read Entire Article