
நவக்கிரகங்களில் அதிக வருடம் ஒரு ராசியில் சஞ்சரிக்கக்கூடியவர் சனி பகவான். சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைவது மிகப்பெரிய அளவில் தாக்கம் அளிக்கக்கூடிய கிரகப் பெயர்ச்சி ஆகும். எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் தெரியத் துவங்கும்.
சனி பகவான் வரும் 29-ம் தேதி (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். (வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது)
சனிப்பெயர்ச்சி என்றால் பலரும் பயப்படுவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. சனிப்பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனி பகவான் சஞ்சாரம் செய்யும் இரண்டரை ஆண்டுகளில் ராகு, கேதுக்கள் இரண்டு முறையும், குரு பகவான் மூன்று முறையும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த மூன்று கிரகங்களின் பெயர்ச்சியும் இணைந்தே ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கின்றன. ஒரு கிரகம் அசுப பலனை வெளிப்படுத்தினால் இன்னொரு கிரகம் சுப பலனைத் தரும். மேலும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமான நிலையில் இருந்தும் கோட்சார கிரகங்களும் சுப பலனை தரும். தசா புத்தி சற்று ஏற்ற இறக்கமாக இருந்தால் கோட்சார கிரகங்கள் அசுப பலனை வழங்கும். அரச மர விநாயகர் வழிபாடு அனைத்து வித இன்னல்களையும் நீக்கும்.
பரிகார ராசிகள்
சிம்மம்- அஷ்டமச் சனி
கன்னி - கண்டகச் சனி
தனுசு- அர்தாஷ்டமச் சனி
கும்பம்- பாதச் சனி
மேஷம்- விரசயச் சனி
அனுகூல ராசிகள்
ரிஷபம் - லாபச் சனி
துலாம் - ரோக ஸ்தான சனி
மகரம் - சகாய ஸ்தான சனி
மத்திம ராசிகள்
மிதுனம் - கர்மச் சனி
கடகம் - பாக்கியச் சனி
விருச்சிகம் - பஞ்சம சனி
6 கிரகச் சேர்க்கை:
29.3.2025 அன்று நீர் ராசியான மீனத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனினும் அதிக கிரகங்கள் ஒரே ராசியில் சேருவது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. மேலும் வினை ஊக்கிகளான சனியும் ராகுவும் ஒன்றையொன்று கடக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, ஓடை ஆகிய இடங்களுக்கு அருகில் இருப்பவர்களும் அவ்விடங்களுக்கு கற்றுலா செல்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பது நல்லது. இனம் புரியாத நோய் தாக்கம் ஏற்படலாம். உணவுப் பொருட்களை சேமித்து விரயம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும். அவரவர் பார்த்துக் கொண்டு இருக்கும் தொழில் அல்லது உத்தியோகத்தை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையை பாதிக்க கூடிய முக்கிய பெரிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.