சனி தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

2 days ago 2

கிரகங்களில் சனி கிரக பெயர்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு ராசியில் அதிக வருடம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளது. அவ்வகையில் இன்று (29.3.2025) இரவு 9.44 மணிக்கு சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பொறுத்தே அமையும். ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். எனவே, ஜாதகத்தில் சனி பகவானின் எதிர்மறை தாக்கம் இருந்தால் அதற்குரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வது வழக்கம்.

ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

* உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு சிரமம் இருப்பவர்கள் சனிக்கிழமை மவுன விரதம் இருக்கலாம். சனிக்கிழமை சனி ஓரைகளில் காலை 6-7, மதியம் 1 - 2, இரவு 8 - 9 ஆகிய நேரங்களில் சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.

* நேரம் கிடைக்கும்போது சிவன் கோவில் உழவாரப்பணி செய்தால் சனி பகவான் மிகவும் நல்ல பலனை தருவார். சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடலாம்.

* சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

* சனிக்கிழமைகளில் பித்ருக்களை வழிபடலாம். சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிடலாம்.

* சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் நல்லெண்ணெய் தீபம் 6 ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம். சனி தசா, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி காலங்களில் அசைவ உணவை தவிர்த்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வரலாம்.

* சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

* குலதெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல, அரச மரங்களை நட்டு வளர்ப்பது நல்லது. ஜென்ம நட்சத்திர நாளில் அவரவர் நட்சத்திர விருட்சங்களை வழிபட எந்த தீவினையும் நெருங்காது.

* பவுர்ணமி நாட்களில் குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

* நவக்கிரக வழிபாட்டு முறையில் எதிலும் வெற்றி பெறலாம். விநாயகர், ஆஞ்சநேயர் இவர்கள் இருவரையும் பூஜித்தால் சனி தோஷம் நெருங்காது. சனிக்கிழமை அல்லது சனி ஓரைகளில் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட சகல சங்கடங்களும் விலகி நிம்மதி கூடும் என்பது நம்பிக்கை.

Read Entire Article