
புதுடெல்லி,
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும்' என பேசினார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி, இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.