
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா (வயது 38). இவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இந்திய அணி நடப்பு ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடருக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் நேற்று அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித்தை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் என தகவல்கள் வெளியாகின.
அதோடு தற்போது 38 வயதாகும் அவருக்கு பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வை அறிவித்ததாகவும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ரோகித் சர்மாவின் மீது பி.சி.சி.ஐ எந்த ஒரு அழுத்ததையும் கொடுக்கவில்லை என்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு தான் என்றும் பி.சி.சி.ஐ-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வுபெறும் முடிவை எடுத்தது அவருடைய தனிப்பட்ட முடிவு தான். அதில் பி.சி.சி.ஐ நிர்வாகமோ அல்லது நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அழுத்தத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை. மேலும், நாங்கள் எந்தவொரு வீரருக்கும் நெருக்கடி கொடுப்பதில்லை இதுதான் பி.சி.சி.ஐ-யின் கொள்கை. வீரர்களின் செயல்பாடு மற்றும் திறனுக்கு ஏற்பவே நிர்வாகத்தின் மூலம் நகர்வுகள் நடைபெறும் மற்றபடி தனிப்பட்ட விசயத்தில் யார் மீதும் நாங்கள் அழுத்தத்தை கொடுப்பது கிடையாது.
ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணிக்காக செய்த பங்களிப்பு அபரிவிதமானது. அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறோம். அதே போன்று இனிவரும் காலங்களில் அவரது அனுபவத்தையும், திறமையையும் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.