சென்னை,
சென்னை காமராஜர் அரங்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மலேரியா, டெங்கு நோய்கள் போல, சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் தாக்குபவர்களை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றன. அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்று சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார்.
சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க இயலாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருப்பதி பாலாஜியின் மண்ணில் இருந்து இதனை கூறுகிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று தெரிவித்தார். ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பவன் கல்யாண் பேச்சு தொடர்பாக, தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று சிரித்தபடி பதில் அளித்து சென்றார்.