நாகர்கோவில் : இந்தியாவுக்கு விண்வெளியில் ஆய்வு கூடம் அமைக்க திட்டம் உள்ளது என்று ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவராக பொறுப்பேற்க உள்ள விஞ்ஞானி நாராயணன் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர். இவர் நாளை மறுநாள் (15ம்தேதி) பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11வது தலைவர் விஞ்ஞானி நாராயணன் ஆவார். ஏற்கனவே குமரி மாவட்டத்தை சேர்ந்த மாதவன் நாயர், சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட பின் நேற்று காலை முதல் முறையாக விஞ்ஞானி நாராயணன் குமரி மாவட்டம் வந்தார். அவர் கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைபதிக்கு சென்று, தனது நியமன ஆணையை வைத்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ என்பது மிகப்பெரிய அமைப்பு. இறைவனின் அருள், ஆசீர்வாதத்தால் எனக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. இஸ்ரோ தலைவராக என்னை நியமனம் செய்த பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். இஸ்ரோவில் உள்ள 17,500 ஊழியர்கள் அனைவரும் நன்றாக பணியாற்றக் கூடியவர்கள்.
இஸ்ரோ பணியை பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக நான் எதையும் பிரித்து கூற மாட்டேன். குழுவாக இணைந்து நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் என்ன வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறாரோ அந்த பணியை அனைவரும் இணைந்து செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் வேலையை செய்து வருகிறோம். சந்திரயான் 4 நிலவில் தரை இறக்குவதற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன.
நமது நாட்டில் கிரையோஜினிக் இன்ஜின் செல்லும் வேகம் 37 ஆயிரம் கி.மீ. ஆகும். அனைவரின் கூட்டு முயற்சியால் இதை நாம் சாதித்து உள்ளோம். உலகத்தில் 6 நாடுகளில் தான் இவ்வளவு வேகம் செல்ல கூடிய கிரையோஜினிக் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிற்கு விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்க இருக்கிறோம். 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் சுமந்து செல்லும் திறன் படைத்த ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக ஆட்களை விண்வெளிக்கு கொண்டு சென்று அழைத்து வர இருக்கிறோம். தொலைத்தொடர்பு, தொலை உணர்வு சாட்டிலைட் ஏவுதல் போன்ற எதிர்கால திட்டங்கள் உள்ளன. நான் பொறுப்பேற்ற பிறகு அனைவருடனும் விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்த திட்டங்கள் குறித்து அறிவிப்போம். குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சந்திரயான் 4 பணிகள் விரைவில் தொடங்கும் இந்தியாவுக்கு விண்வெளியில் ஆய்வு கூடம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள விஞ்ஞானி நாராயணன் பேட்டி appeared first on Dinakaran.