திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரியில் உள்ள தனது வீட்டில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா இன்று அதிகாலை குடும்பத்தினர், நண்பர்களுடன் போகி பண்டிகை கொண்டாடினார். அப்போது பழைய பொருட்களை எரித்து கும்மியடித்தபடி அதனை சுற்றி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று எனது உறவினர், நண்பர்களுடன் போகியை தீயிட்டு கொண்டாடினோம்.
இதுபோன்று கிராமத்திற்கு வந்து நம் பண்டிகைகளை குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடி, நமது சமுதாய கலாச்சாரங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் விதமாக கடைபிடித்து வருகிறோம். மாநிலத்தில் மக்கள் கவலையில் உள்ளதை பார்க்கிறோம். ஜெகன்மோகன் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் புதிய ஆடைகள் உடுத்து கொண்டாடி வந்தனர். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசு கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல், மக்கள் மீது மின் கட்டணம் உயர்வை சுமத்தியுள்ளனர்.
மேலும் விவசாயிகளுக்கான முதலீட்டு நிதி தொகை வழங்காமல், மழையால் பாதித்த பயிருக்கு நஷ்ட ஈடு வழங்காமல், எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் வஞ்சித்துள்ளனர். விவசாயிகளின் முக்கிய பண்டிகையாக கருதுவது சங்கராந்தி. ஆனால் இந்த ஆண்டு கிராமத்தில் எங்கு சென்றாலும் ஆந்திராவில் விவசாயிகள் வாழ்வு மகிழ்ச்சியற்றதாக அமைந்துள்ளது. இந்த 7 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட இருள் இந்த போகி தீயில் எரிந்து மீண்டும் ஒளிபிறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சந்திரபாபு ஆட்சியில் ஏற்பட்ட இருள் விலகி ஒளி பிறக்கட்டும்: போகி கொண்டாடிய நடிகை ரோஜா பேட்டி appeared first on Dinakaran.