சென்னை: கோயம்பேடு முதல் ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு முதல் ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை கோயம்பேடு வழியாக ஆவடி வரை நீட்டிப்பது குறித்த ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரையில் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான சீரமைப்பு நீளம் 16.1 கிமீ ஆகும். கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது முகப்பேரில் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மெட்ரோ நிலையம், ஆவடியில் அல்லது பட்டாபிராமில் உள்ள வெளிவட்டச் சாலையில் அருகே உள்ள காலி இடத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டராக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான நீளத்தில் சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
The post கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க ஆய்வறிக்கை தயாரிப்பு: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.