சந்திரகாந்த யோகப் பலன்கள்

1 week ago 6

சந்திரகாந்த யோகம் என்ற வுடன் புதிதாக இருக்கிறதே என்னவென்று தோன்றலாம். அதாவது, சந்திர – மங்கள யோகம் அல்லது சசி மங்கள யோகத்தின் அமைப்புதான் இந்த சந்திரகாந்த யோகம் ஆகும். மங்களன் என்று சொல்லக்கூடிய செவ்வாய், சந்திரனுடன் இணைவதால் ஏற்படும் யோகமாகும். சந்திரகாந்தக்கல் என ஒன்று உள்ளது. இந்த காந்தக் கல் சந்திரக் கதிரினை கிரகித்துக் கொண்டு அதிலிருந்து நீரினை உற்பத்தி செய்யும் ஒரு கல்லாகும். இந்தக் கல் எங்கு உள்ளதோ அங்கு சொட்டு சொட்டாக நீரினை கொடுக்கும் சக்தி இந்த சந்திரகாந்தக் கல்லுக்கு உண்டு. அதுபோலவே, இந்த சந்திரன் – செவ்வாயின் இணைவும் ஒரு அதிசயமான அமைப்பாகும். இந்த காந்தக் கல் எப்படி நீரினை ஈர்க்கும் சக்தியினை கொண்டுள்ளதோ அது போல செல்வத்தை ஈர்க்கும் அமைப்பாகும். இதனை இன்னும் விரிவாகக் காண்போம்.

சந்திரகாந்த யோகத்தின் அமைப்புகள் என்ன?

சந்திரனும் – செவ்வாய் நேரடியாக ஒரே ராசிக்கட்டத்தில் இணைந்திருந்தாலும்; திரிகோணங்கள் என்று சொல்லக்கூடிய 1,5,9-ம் பாவங்கள் வழியே சந்திரன் – செவ்வாய் இணைந்திருந்தாலும்; சந்திரன் – செவ்வாய் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும்; செவ்வாய் – சந்திரன் நட்சத்திர சாரத்தில் இணைந்திருந்தாலும்; செவ்வாய் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் இந்த சந்திரகாந்த யோகம் சிறிதளவேனும் யோகத்தைக் கொடுக்கும். மேலும், சந்திரனும் – மங்களனும் ஒருவருக் கொருவர் சமசப்தமாக பார்த்துக் கொள்வது. இதில், சந்திரனோ அல்லது செவ்வாயோ ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருப்பதும்; இதில், சந்திரன் வளர்பிறையாக இருக்கும் பொழுது சந்திரகாந்த யோக முழு நற்பலன்களை கொடுக்கும். இந்த கிரக இணைவுக்குள் அசுப கிரகங்கள் வந்தால் பலன் மாறுபட்டதாக இருக்கும்.

சந்திரகாந்த யோகப் பலன்கள்

*நவகிரகங்களில் விரைவாக சூரியனை வலம் வரும் கிரகம் சந்திரன். நவகிரகங் களில் வேகத்தை குறிக்கும் கிரகம் செவ்வாய். இந்த இரு கிரகங்களும் இணைவாக உள்ளவர்கள் மிகுந்த வேகமுடையவர்களாக இருப்பர். இந்த இரு கிரகங்களுடனும் மற்ற கிரகங்களின் சேர்க்கை இருக்கக்கூடாது. ஓரிடத்தில் அமைதியாக இருக்க மாட்டார்கள்.
* இந்த கிரக இணைவானது காந்த் என்ற பெயரை கொடுக்கும்.
*இந்த கிரக இணைவு உள்ளவர்கள் ரசம் விரும்பி உண்பர். எவ்வளவோ சாப்பிட இருந்தாலும் ரசத்திலேயே முழுச் சாப்பாட்டை ரசமாகவே சாப்பிட வேண்டும் என்ற ரசப்பிரியர்களாக இருப்பர்.
* சுறுசுறுப்புடன் இருப்பர். எல்லாம் வேகம். சாப்பிடுவதில் வேகம், நடப்பதில் ேவகம் மற்றும் இவர்கள் யாருடனாவது தன்னை போட்டியாகப் பாவித்துக் கொள்வர்.
* முருகனை வழிபடுவதில் அதிகப்பிரியம் காட்டுவர். மலையேறி வழி படுபவர்கள் இந்த யோக அமைப்பினை உடையவர்களாக இருப்பர்.
* அதீத வேகம் உள்ளதால் பிளட் பிரெஷர் வர வாய்ப்பிருக்கும். இவர்களின் உடலில் உள்ள ரத்தத்தின் வேகம் அதிகம்.
* செவ்வாய் வலிமையாக இருந்தால் இவர்கள் தேகம் எப்பொழுதும் குண்டாகவும் இல்லாமல் மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தரமாகக் காணப்படுவார்.
* இந்த யோகமானது வீடு, மனை போன்றவைகளை நன்றாகஅமைத்துக் கொடுக்கும்.
* சிலருக்கு நிலம் வாங்கி – விற்கும் தொழில் செய்பவர்களாகவும்; பெரிய அளவில் வீடுகளைக்கட்டி விற்கும் துறையில் அதிகாரிகளாகவும் இருப்பர்.
* செவ்வாய் நெருப்பு கிரகம்; சந்திரன் நீர்கிரகம். ஆகவே, செவ்வாயுடன் சந்திரன் இணைவது செவ்வாயின் மூர்க்கத்தன்மையைக் குறைக்கும். ஆகவே, வளர்பிறை சந்திரன் செவ்வாயோடு இணைவது நல்ல யோக அமைப்பாகும்.
* இவர்களுக்கு தேவைக்கேற்ற பணம் வரும். சிலர் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விடும் அமைப்பினை உடையவர்களாக இருப்பர்.
* பெரும்பாலும் மருத்துவர்களுக்கும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் ராணுவத்தில் பணியாற்று பவர்களுக்கும் செஃப் என்ற சமையல் கலைஞர்களுக்கும் இந்த சந்திர காந்த யோகம் இருக்கும்.
* இந்த யோகம் பெண்களுக்கு சுபமாக அமைந்தால் கணவன் எப்படி இருந்தாலும் மனைவியை நோக்கி வருவான் என்பது மாற்ற முடியாத விதி. இங்கு செவ்வாய் என்பது கணவனை குறிக்கிறது.
* இதே சந்திரனானது மகரத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் ‘தவிட்டுப் பானையெல்லாம் தங்கம்’ என்று ஜோதிடத்தில் ஒரு பழமொழியே உண்டு.

பஞ்சபூத தத்துவ அடிப்படையில் சந்திர காந்த யோகம்

* சந்திரனும் செவ்வாயும் இணைந்து மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசிகளில் அமர்ந்திருந்தால் அல்லது தொடர்பில் இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், பொருளாதாரம் மேம்படும், புகழ்பெறும் அமைப்பில் இருப்பர்.
* சந்திரனும் – செவ்வாயும் இணைந்து மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசிகளில் இருந்தால், இவர்களுக்கு இடப்பெயர்வுஅதிகம் இருக்கும். இவர்கள் வாங்கும் சொத்துகள் பெருகும்.
* சந்திரனும் – செவ்வாயும் இணைந்து கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசிகளில் இருந்தால், கடல் கடந்து போகும் யோக அமைப்புகள்உண்டாகும்.
* சந்திரனும் – செவ்வாயும் இணைந்து ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால், ஏராளமான சொத்துகளை வாங்கும் அமைப்பாகும். சொத்துகள் மூலம் வருமானம் வரக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும். வீடு வாடகைக்கு விட்டு வருமானத்தை கொடுக்கும்.

சந்திரகாந்த யோகம் மேம்பட என்ன செய்யலாம்?

* சஷ்டி விரதம் இருப்பது சிறப்பான நற்பலன்களை செய்யும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
* பாலமுருகனை வழிபடுவதுஅதாவது, குழந்தை வடிவில் உள்ள முருகனை திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும்.
* முருகனுக்கு பால் அபிஷேகம்செய்வதும் நன்மையைத் தரும்.
* தனித்த முருகனை வழிபடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.
* சந்திரக்காந்தகல் என்ற ரத்தினம் உண்டு. அதனை அணிந்து கொள்வதும் சிறப்பான நற்பலன்களைத் தரும்.

 

The post சந்திரகாந்த யோகப் பலன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article