நன்றி குங்குமம் டாக்டர்
சந்தன எண்ணெய் மிகவும் மணம் கொண்ட எண்ணெய்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. இது அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். சந்தன எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பிய, சந்தன எண்ணெய் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இது உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கிறது.
சந்தன எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்குகிறது. முகப்பருவை குறைக்க உதவுகிறது. இது கறைகள், சுருக்கங்கள், கோடுகள், புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை எதிர்த்துப் போராடுகிறது. வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது. தோல் கருத்துப் போவதில் இருந்தும் பாதுகாக்கிறது.
சந்தன எண்ணெயின் மருத்துவ குணங்கள்:
சந்தன எண்ணெய் ஆண்டிசெப்டிக் நிறைந்த எண்ணெய் ஆகும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது செஸ்குயிட்டர்பென்ஸஸ் (sesquiterpenes) எனப்படும் இயற்கையான ரசாயன கலவைகளைக் கொண்டுள்ளது. இந்த இயற்கை ரசாயனம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது
சந்தன எண்ணெய் அதன் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த எண்ணெயின் புத்துணர்ச்சியூட்டும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே, இது கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது. சந்தன எண்ணெயை மணிக்கட்டில் தடவி நேரடியாக சுவாசிப்பதன் மூலம் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
செரிமானம் சீராகும்
சந்தனம் குளிர்ச்சியாக கருதப்படுவதால் இதன் எண்ணெய்யும் குளிர்ச்சி தன்மை கொண்டுள்ளது. சந்தன எண்ணெய்யை தொப்புளில் தடவினால் வயிற்று நெருப்பு தணியும். மேலும், செரிமானத்தையும் சரியாக வைத்திருக்க முடியும். இதன் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்காது.
வீக்கம் குறையும்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் சந்தன எண்ணெய்யில் நிறைந்து காணப்படுவதால், இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ரத்த அழுத்தம் சீராகும்
சந்தன எண்ணெயை தொப்புளில் தொடர்ந்து தடவி வந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் ரத்த அழுத்த பிரச்னையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தொகுப்பு: ரிஷி
The post சந்தன எண்ணெய்யின் நன்மைகள்! appeared first on Dinakaran.