பாரதிதாசன் பிறந்த நாள்: ‘தமிழ் வார விழா’ நிறைவு விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

12 hours ago 2

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் ‘தமிழ் வார விழா’ நிறைவு விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 5ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரால் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடார்கள்.

தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இத்திட்டத்தினை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வார விழாவின் நிறைவு விழா 5.5.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்கள். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி முதலமைச்சர் விழா பேருரையாற்றுகிறார்கள்.

இவ்விழாவில் பல்லவி இசைக்குழுவின் வாயிலாக ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் ‘தமிழ் அமுது-நாட்டிய நிகழ்ச்சி’யும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா! சமூக உணர்வா! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.பாவேந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்தப்படும் இவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post பாரதிதாசன் பிறந்த நாள்: ‘தமிழ் வார விழா’ நிறைவு விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article