சென்னை: பெங்களூரில் உள்ள காப்பகத்தில் இருந்து காணாமல்போன 16 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து மெரினா பகுதியில் சுற்றிதிரிந்த பெண் மீட்கப்பட்டு மகளுடன் சேர்த்து வைக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, மேற்பார்வையில் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் இதுவரை 8,233 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,589 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டும், 1,304 பேர் அவர்களுடைய குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 976 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், 365 நபர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தன்னார்வலர்கள் உதவியுடன் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். மனித நேயத்துடன் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது.
கடந்த 30.04.2025 ஆம் தேதி சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பெயர் ரீட்டா சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் D-5 மெரினா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தலையில் அரிப்பு நோயால் ஏற்பட்ட காயத்துடன் சென்னை மெரினா கடற்கரை ‘நம்ம சென்னை‘ பின்புறம் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் ஆதரவின்றி படுத்திருந்தவரை காவல் கரங்கள் தன்னார்வலர் குழு உதவியுடன் மீட்டு அவருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்து முறைப்படி காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. மீட்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளம் மூலம் பகிரப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் மகள் தேவதர்சினி ( வயது 22) வீடியோவை பார்த்து காவல் கரங்கள் தன்னார்வலருக்கு தொடர்பு கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட மீட்கப்பட்ட பெண் தனது அம்மா என்றும்,
தான் தென்காசி மாவட்டம், SPM தெரு, கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் என்றும் தனக்கு ஜோஸ்வா என்ற தம்பி உள்ளதாகவும், தனது தந்தை ராஜ்குமார் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு தனது அம்மாவை விட்டு பிரிந்து சென்றதால் தனது அம்மாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு பெங்களுருவில் உள்ள Old Health Care காப்பகத்தில் பாராமரிக்கப்பட்டு வந்ததாகவும் கடந்த 02.01.2025 அன்று மேற்படி காப்பகத்திலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும் விசாரணையின் போது தெரிவித்தார். காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட ரீட்டாவை நேற்று 02.05.2025 அவரது மகள் மற்றும் உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து மீண்டும் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டமைக்கு அவரது மகள் சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post காவல் கரங்கள் மூலம் மெரினா பகுதியில் சுற்றிதிரிந்த பெண்ணை மீட்டு குடும்பத்தினருடன் சேர்ப்பு appeared first on Dinakaran.