சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், கிட்டத்தட்ட 9,000 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப தி.மு.க. அரசு உத்தரவிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்படும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் போன்றோர் அவர்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் தான் இதுவரையில் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இந்த சிறப்பு கால முறை ஊதியம் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலமுறை ஊதியத்தை விட மிகக் குறைவு. இந்த நிலையில், தற்போது காலியாக உள்ள பணியிடங்களில், அவசர அவசியம் கருதி 9,000-க்கும் மேற்பட்ட சமையல் உதவியாளர் பணியிடங்களை மாதம் 3,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்படுவதாகவும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் திருப்திகரமாக தங்களுடைய பணியை முடிக்கும் நிலையில், தகுதியான பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு காலமுறை ஊதியத்தை விட பாதிக்கும் குறைவாக தொகுப்பூதியம் நிர்ணயிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த 3,000 ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமம். ஒன்பதாயிரம் பேருக்கு வேலையளித்து விட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள தி.மு.க. அரசுக்கு உதவுமே தவிர , வேறு எதற்கும் பயன்படாது.
ஏற்கெனவே அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்தாத தி.மு.க. அரசு, இடை நிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாத தி.மு.க. அரசு இதை நிறைவேற்றுமா என்பது சந்தேகம்நான். உண்மையிலேயே அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், அனைவரையும் சிறப்பு காலமுறை ஊதியத்தில், வெளிப்படையான முறையில் பணியமர்த்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .