சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்

6 hours ago 1

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நக்சலைட்டுகள் பலரும் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலைட்டுகள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சத்தீஷ்காரில் உள்ள மொஹல் மன்பூர் சவ்கி மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள 17 கிராமங்களில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிலவி வந்த பகுதி என்பதால் இப்பகுதியில் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் நிலவி வந்தது.

இந்நிலையில், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் தற்போது கட்டுக்குள்ள் வந்த நிலையில் அந்த 17 கிராமங்களுக்கும் முதல் முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு அப்பகுதியில் சோலார் மின் இணைப்பு மட்டுமே இருந்தது. சோலார் மின் இணைப்பு அவ்வப்போது பழுதாவதும், சோலார் பேனல்கள் திருடப்படும் சம்பவங்களும் அரங்கேறி வந்ததன.

தற்போது அந்த கிராமங்களில் முதல் முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. 17 கிராமங்களில் மொத்தம் 540 குடும்பங்கள் உள்ளதாகவும், இதில் 275 குடும்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் எஞ்சிய குடும்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும்பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக மின் இணைப்பு பெற்றுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Read Entire Article