சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் மாற்றுத்திறனாளிகள் அவதி

2 months ago 7

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தத்தை கலைஞர் நகர், சரஸ்வதி நகர், கார்கில் வெற்றி நகர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இருக்கை, மின்விளக்கு வசதி போன்றவைகளோடு மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணிக்கும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடைகளை அமைத்து பழம், சிற்றுண்டி போன்றவர்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாநகர பேருந்துகள் நிற்பதற்கு போதிய இடம் இல்லாமல் இருப்பதோடு பயணிகள் எளிதாக பேருந்து வந்து ஏற முடியாத நிலையும் உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையையும் ஆக்கிரமிப்பு கடைகளால் எளிதாக பயன்படுத்த முடியாததால் மாற்றுத்திறனாளிகளும் சிரமப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி பிரதான சாலை சந்திப்பில் உள்ள கடைகளால் சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கலைஞர் நகருக்கு வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,

தேவைப்பட்டால் இடையூறு இல்லாத இடத்தில் அவர்கள் நடைபாதை வியாபாரம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும் பயணிகளும் மாற்றுத்திறனாளிகளும் தினந்தோறும் மாநகர பேருந்துகளில் பயணிக்க தினமும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் மாற்றுத்திறனாளிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article