
காந்திநகர்,
ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக ரூ.2,927.71 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி குஜராத் தகவல் துறை வெளியிட்ட செய்தியில், 2020-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, குஜராத்தில் 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 9 மாவட்டங்களில் 53 தாலுகாக்கள் முழுவதும் 674 சிங்கங்கள் பரவி காணப்படுகின்றன. இந்த சூழலில், அவற்றை பாதுகாக்கும் திட்டம் சிங்கங்களின் நலனுக்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கின்றது.
ஆசிய சிங்கங்களை பாதுகாப்பது மற்றும் அவற்றின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வது, வாழ்விட மேலாண்மை வழியே மற்றும் சமூக மக்களின் பங்கேற்புடன் அவை நீண்டகாலம் வாழ்வது உறுதி செய்யப்படுவது ஆகியவற்றுக்காக இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம், மனித வனவிலங்கு மோதல் குறைக்கப்படுதல், சுற்றுலா வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி, பயிற்சி, சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பரவலான செயல் திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
இதற்காக 162 ஆண்கள், 75 பெண்கள் 2024-ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டனர். வனவாழ் அவசரகால தேவைக்கு ஏற்ப, உடனடியாக செயல்பட ஏதுவாக 92 மீட்பு வாகனங்களும் உள்ளன.
இதேபோன்று, 55,108 திறந்த நிலையிலான கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. வனவாழ் பாதுகாப்பில் உலகளாவிய தலைவராக தன்னை இந்தியா நிலை நிறுத்தி கொள்வதில் இந்த திட்டம் உறுதி செய்யும். இந்தியாவின் வனவாழ் பாதுகாப்பு பயணத்தில் ஒரு வரலாற்று தருணம் என்ற வகையிலும் இந்த திட்டம் அமையும்.