சென்னை: சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரர்களுக்கு ெசாந்தமான கட்டுமான நிறுவனம் மற்றும் வீடுகள் என சென்னை, திருச்சி, கோவை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
திருச்சி தில்லை நகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மறைந்த அவரது சகோதரர் ராமஜெயம் வீடும் உள்ளது. அதேபோல் அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார், இளைய சகோதரர் கே.என்.மணிவண்ணன் கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் டிவிஎச் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், ஜிஎஸ்என்ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டிவிஎச் கட்டுமான நிறுவனம் முறையாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வில்லை என்று கடந்த 2018ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அப்போது பல கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டிவிஎச் கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குறிப்பாக, திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வரும் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரான அருண் நேருவின் வீடு, அருகில் உள்ள மறைந்த கே.என்.ராமஜெயம் வீடு, திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள கே.என்.நேருவின் மகள் வீடுகளில் சோதனை நடந்தது.
அதேபோல் இளைய சகோதரர் கே.என்.மணிவண்ணன் நடத்தி வரும் கோவை மசக்காளிபாயத்தில் உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், வீடுகளில் சோதனை நடந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா அண்ணாமலைபுரத்தில் கே.என்.ரவிசந்திரன் நடத்தி வரும் டிவிஎச் எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனம், அவரது வீடுகளில் சோதனை நடந்தது. அதேபோல், கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ஜிஎஸ்என்ஆர் ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள பிரகாஷ் என்பவரின் வீடு, அடையாறு காந்தி நகர், சாஸ்திரி நகர் உள்பட சென்னையில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடந்தது.
சென்னை, திருச்சி, கோவை என மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. திருச்சியில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வீட்டில் நடந்த சோதனை மாலை நிறைவடைந்தது. ஆனால் மற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இருந்தாலும், டிவிஎச் கட்டுமான நிறுவனம் மற்றும் டிவிஎச் மின் உற்பத்தி நிறுவனம், ஜிஎஸ்என்ஆர் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானம் தொடர்பான ஆவணங்கள், வரவு செலவு உள்பட வங்கி பணப்பரிவர்த்தனை விவரங்கள், மின் உற்பத்தி நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு ெசய்து வருகின்றனர்.
இந்த சோதனை முடிந்த பிறகு தான், எத்தனை கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது என்ற முழுமையான விவரங்கள் தெரிய வரும். இருந்தாலும் மூத்த அமைச்சர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், திருச்சியில் உள்ள வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மகன் மற்றும் சகோதரர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து நேரத்தில் வரும் நிலையில் அமைச்சர் கே.என்.நேரு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு எந்தவித சலனமும் இன்றி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
The post சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேரு மகன், சகோதரர்கள் வீடு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.