![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36039768-fgjj.webp)
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற உடன் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேரியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களை நாடு கடத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த கவுதமாலா நாட்டை சேர்ந்தவர்களில் 160 பேர் ராணுவ விமானங்கள் மூலம் கவுதமாலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கவுதமாலா அரசு ஏற்றுக்கொண்டது. அதேவேளை, மெக்சிகோவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா விமானம் மூலம் அனுப்பி வைத்தது. ஆனால், அவர்களை ஏற்றுக்கொள்ள மெக்சிகோ அரசு மறுத்துவிட்டது.
இதனிடையே, கொலம்பியா நாட்டை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளில் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்த அமெரிக்கா அவர்களை சொந்த நாட்டிற்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பியது. ஆனால், தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ள கொலம்பியா அரசு மறுத்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொலம்பியா மீது அதிரடி வரி விதித்தார். கொலம்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார். இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும், இன்னும் ஒருவாரத்தில் இந்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக கொலம்பியா அதிபர் குஸ்டவ் பெட்ரோ தெரிவித்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வரி ரீதியில் மோதல் வெடித்தது. அதேவேளை, கொலம்பியாவின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்கு விசா கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வர்த்தக கட்டுப்பாடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.
இந்நிலையில், டிரம்ப்பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்த கொலம்பியா தற்போது அடிபணிந்துள்ளது. அதன்படி, தங்கள் நாட்டை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக்கொள்வதாக கொலம்பியா தெரிவித்த்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசித்து வரும் கொலம்பியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் நாட்டிற்கே திரும்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபடு வருகின்றனர். இதையடுத்து, கொலம்பியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.