சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் பிராதன எதிர்கட்சி என்ற முறையில் நாட்டு மக்களின் பிரச்னையை நேரமில்லா நேரத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு வர பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். அவர் அனுமதி மறுத்தார். எதிர்கட்சியின் கடைமை நாட்டில் நடக்கும் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதுதான். அதை நாங்கள் செவ்வனே செய்கிறோம்.
திமுக எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, நேரமில்லா நேரத்தில் அவ்வப்போது பேசுவார்கள். அதற்கான பதிலை நாங்கள் அளித்து இருக்கிறோம். அதேபோன்று நாட்டில் நடந்த பிரச்னை குறித்து பேச முற்பட்டபோது அனுமதி கொடுக்க மறுத்து எங்களை வெளியேற்றி விட்டார்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் முத்துக்குமரன் மற்றும் அவரது நண்பரை கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் சரமாரியாக வெட்டி, தலையில் கல்லைப்போட்டுள்ளனர்.
இதில் காவலர் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். கொலையாளி பொன்வண்ணன் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளார். முன்னாள் டிஜிபி ஒருவர் கஞ்சாவை கட்டுபடுத்த கஞ்சா ஆப்ரேஷன், 2.0, 3.0, 4.0 என போட்டு ஓய்வும் பெற்று விட்டார். அப்படி காவல்துறை போதைப்பொருளை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஆனால், இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்று காத்திருந்தோம். இதை கவனத்திற்கு கொண்டு வர சட்டப்பேரவையில் பேச அவர் அனுமதிக்கவில்லை. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவரை, மர்ம நபர் பைக்கில் கடத்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசவேண்டும் என்று சட்டபேரவையில் அனுமதி கேட்டேன். இது மக்கள் பிரச்னை. எங்களைத் திட்டமிட்டு வெளியேற்றி இருகிறார்கள். பேரவையில் எங்கள் பேச்சை கேட்க அவர்கள் தயாராகவில்லை. பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் அரசை குறை சொல்ல கூடாது என்று எங்களை வெளியேற்றி இருகிறார்கள். இவ்வாறு எடப்பாடி கூறினார்.
The post சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.