ஓமலூர்: ‘சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’ என ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக் கொள்ள வேண்டுமென பாஜ அழுத்தம் தருகிறது என கூறுகிறார்களே என கேட்டனர் அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. பாமகவுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை. நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் கூறுகிறோம். தவாக வேல்முருகன் எங்களை அணுகவில்லை.
நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், ஒரு நிலையான கூட்டணி பற்றி பேசுவோம். கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
The post சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.