கோவை, ஏப். 17: கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்லும் பயணிகள், மாணவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முன்னெச்சரிக்கையுடன் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குதல், பயிற்சி அளித்தல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்துகள் செல்லும்போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பேருந்துகளின் இரண்டு பக்கமும் பக்கவாட்டில் பாதுகாப்பு பைபர் தகடு தடுப்பு அமைக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
அதன்படி, கோவை மாநகரில் இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பக்கவாட்டில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தனியார் பேருந்துகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், தனியார் டவுன் பஸ்களில் தடுப்புகள் அமைக்கவில்லை. இதையடுத்து, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து போலீசார் நேற்று தனியார் பஸ்களில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்காமல் இருந்த தனியார் பஸ்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, 35 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பஸ்களில் விரைந்து தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். தவிர, அனைத்து தனியார் பஸ்களிலும் இம்மாத இறுதிக்குள் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post சக்கரத்தில் சிக்கி இறப்பதை தடுக்க பைபர் தகடு அமைக்காத கோவை தனியார் டவுன் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.