கோவை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி இன்று (நவ.6) தொடங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோவைக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.