சென்னை,
ராணுவத்தை பொறுத்தவரை மண்டல வாரியாக ஆட்சேர்ப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது கோவையில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வருகிற நவம்பர் 4 ந் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராணுவ வீரர்கள், சமையல் கலைஞர்கள், சலவை தொழிலாளி ,குமாஸ்தா உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணுவ வீரர்கள் பணிக்கு மட்டும் 174 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நடைபெறும் தேதி:
நவம்பர் 4-ந் தேதி தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு டையு டாமன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், நவம்பர் 5 ந் தேதி ஆந்திரா கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6-ம் தேதி ராஜஸ்தான், மராட்டியத்தை சேர்ந்தவர்களும் தேர்வில் பங்கேற்கலாம்.
நவம்பர் 7-ந் தேதி அரியலூர் செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம் நீலகிரி பெரம்பலூர் புதுக் கோட்டை ராணிபேட்டை தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
நவம்பர் 8-ந் தேதி கோவை, சென்னை, ஈரோடு, குமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை. திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். நவம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கேரளாவை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நவம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.