கோவையில் நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த கனமழை; சாலைகளில் வெள்ளம்; ரயில்கள் தாமதம்

3 weeks ago 6

கோவை: கோவையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 2 கார்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கோவையில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் உக்கடம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ஒப்பணக்கார வீதி, புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகில் உள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை சிவானந்தா காலனி ஏஆர்சி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

மேட்டுப்பாளையம்- காரமடை சாலையில் உள்ள சிடிசி டெப்போவின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பிரஸ் காலனிக்கு அடுத்த கோட்டை பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தரைப்பாலம் நிரம்பிய நிலையில் ரயில்வே பாலத்தின் அடியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கின. சூழ்நிலையை தெரிந்துகொண்டு 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பினர். சில நிமிடங்களில் அந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரில் வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரயில்கள் தாமதம்: மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 9.20 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 10.10 மணிக்கு புறப்பட்டது. அதேபோல் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த மெமு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

The post கோவையில் நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த கனமழை; சாலைகளில் வெள்ளம்; ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article