கோவை: சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தவெகவின் முதல் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம், அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
கோவை அடுத்துள்ள குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார்.
விமான நிலையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வேனில் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். பின்னர் இன்று மாலை 4 மணிக்கு கல்லூரியில் நடைபெற உள்ள மேற்கு மண்டல வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
பயணிகள் அவதி விமான நிலையத்தில் பயணிகளின் நலன் கருதியும், கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், விஜய் வரவேற்பு நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விஜயை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய பயணிகளும், உள்ளே வர வேண்டிய பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post கோவையில் தவெகவின் முதல் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம், விஜய் தலைமையில் தொடங்கியது. appeared first on Dinakaran.