சென்னை: உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டினால் இனி ‘குண்டாஸ்’ விதிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி நேற்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளி சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசார தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள், காணொலி திருடர்கள் தடுப்பு காவலில் (குண்டாஸ்) வைக்கப்படுவார்கள் என்று 2024-25ம் ஆண்டு காவல் துறை மானியக்கோரிக்கையின்போது சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
தற்போது, அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன. உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. இதனால் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இனி தடுப்பு காவல் (குண்டாஸ்) விதிக்கும் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டமுன்வடிவின்படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள். அத்தகைய நபரின் சொத்தை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு பதில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி ‘குண்டாஸ்’: பேரவையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.