சென்னை: கல்விதான் நமது ஆயுதம். அதனை எந்த இடர் வந்தாலும்; கல்வியை விடக்கூடாது என நான் முதல்வன் திட்டம் மூலமாக யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தமிழக மாணவர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் நேற்று அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் எல்லோரையும் முதலில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நமது அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும் – இளைஞர்களும் நிச்சயமாக தங்களுடைய லட்சியங்களை அடையவேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும், வளர்ந்து வரவேண்டும் என்பதற்காகதான் ‘நான் முதல்வன்’ என்று பெருமைப்படக்கூடிய அளவுக்கு இந்த திட்டத்தை ‘நான் முதல்வன்’ என்கின்ற அந்த அடிப்படையில்தான் இதை உருவாக்கி இருக்கிறோம்.
சாமானிய வீடுகளில், பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுத கூடியவர்களாக வளர்ந்திருக்கின்றீர்கள். உங்களை பாராட்டுவதுதான், திராவிட இயக்கத்தின் வழிவந்திருக்கக்கூடிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விதான் நமக்கான ஆயுதம்; எந்த இடர் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது. அதனால்தான், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தோம். அதைத் தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம், “தமிழ்ப்புதல்வன்” திட்டம், “கல்லூரிக் கனவு” திட்டம், “சிகரம் தொடு” திட்டம், “உயர்வுக்குப் படி” திட்டம் என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, “நான் முதல்வன்” போன்ற திட்டங்களால் Upskill செய்து, பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் வேலைவாய்ப்பு கிடைப்பதை பார்க்கின்றபோது நாம் பூரிப்பு அடைகிறோம்.
தமிழ்நாட்டிற்கு என்று ஒரு ‘அறிவுமுகம்’ இருக்கிறது. ஒரு ஐ.ஏ.எஸ் – ஒரு ஐ.பி.எஸ் தமிழ்நாட்டு கேடராக இருந்தால், அவர்களுக்கான மதிப்பே தனி; அதுவும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதலாகிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாகிறது குறைந்துவிட்டது. ஆனால், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். குடிமை பணி தேர்வுகளுக்கு தயாரான உங்களுக்கு, நம்முடைய அரசு எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உங்களுடைய சுமைகளை குறைக்க ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்து, உங்களில் பலரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்தோம். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ்-ஆக மோட்டிவேஷன் செய்யவேண்டும்.
மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் பணியை, நீங்கள் தேர்வான அன்றைக்கே தொடங்கிவிட்டீர்கள். அதிகாரம் என்பது இந்த சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாக அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயன்படுவதாக அமையவேண்டும். இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு ரோல் மாடலாக பல பேர் இருப்பார்கள். இனிமேல் நீங்கள் பல பேருக்கு ரோல் மாடலாக வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு தேர்வாகி இருக்கின்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாக தான் அந்த நிலையை அடையமுடியும்.
என்னுடைய பொதுவாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெறவேண்டும். சமூகநீதி – நேர்மை – துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காக பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்து கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள். நான் அடுத்த முறை உங்களை சந்தித்தாலும், உங்களுடைய பணிகளையும், சாதனைகளையும் சொல்லி வாழ்த்தவேண்டும்; அதுதான் என்னுடைய ஆசை. எனக்கு அந்த நம்பிக்கை உங்கள் முகங்களை பார்க்கும்போது நிச்சயமாக வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post கல்விதான் நமது ஆயுதம் எந்த இடர் வந்தாலும் கல்வியை விடக்கூடாது: சமத்துவம் – சமூகநீதி – நேர்மையை வைத்து மக்களின் உயர்வுக்கு பாடுபடுங்கள்; யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தமிழக மாணவர்களிடையே முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.