கோவைக்கு இனி பொற்காலம்தான்… சிட்கோ-மதுக்கரையை இணைக்க வருகிறது புதிய பாலம்

1 week ago 3

கோவை, நவ. 6: கோவை மாவட்டத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டிருக்கிறது. புதிது புதிதாக பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலைபோல் பொள்ளாச்சி சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில். சிட்கோ சாலை-மதுக்கரை சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை விளாங்குறிச்சியில் அரசுத்துறை நிறுவனமான எல்காட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 2வது ஐ.டி பார்க்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்துள்ளார். இதன்மூலம், 3,200க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதுதவிர ஏராளமான தனியார் ஐடி பார்க்குகளும் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன.

இதற்காக, ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலங்களை ைகயகப்படுத்தி தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரம், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, சாய்பாபாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மிக விரைவில் சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கோவைக்கு, மெட்ரோ ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, கலைஞர் நூலகம் உள்ளிட்ட திட்டப்பணிகளும் நடந்து வருகின்றன. இதேபோல், புதிது புதிதாக மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன.

கோவை மாநகரம் வேகமாக வளர்வதால், போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பொள்ளாச்சி சாலையை பொறுத்தவரை ஏராளமான கல்வி நிறுவனங்கள், சிட்கோ ஆகியவை இருப்பதால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்கின்றனர். இந்நிலையில், சிட்கோ சாலை மற்றும் மதுக்கரை சாலையை இணைக்கும் வகையில் ஒரு புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சாலையில் இருந்து சிட்கோ சாலை மற்றும் மதுக்கரை சாலையை கடக்க 2 கிமீ தொலைவு இடைவெளி உள்ளது. ஏராளமான மக்கள் பயன்படுத்தினாலும் இந்த சாலைக்கு சரியான இணைப்பு இல்லை. இதன் காரணமாக மக்கள் பொள்ளாச்சி சாலை, சுந்தராபுரம் சிக்னலை கடந்துசெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது. எனவே சிட்கோ சாலை-மதுக்கரை சாலையை நேரடியாக இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 14 மீட்டர் அகலத்தில் இப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும். அதன்பிறகு, கட்டுமான பணி துவங்கும். இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், சுந்தராபுரம் சிக்னல் வராமல் நேரடியாக பயணிக்கலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோவைக்கு இனி பொற்காலம்தான்… சிட்கோ-மதுக்கரையை இணைக்க வருகிறது புதிய பாலம் appeared first on Dinakaran.

Read Entire Article