ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டுகளை பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: சாரணர் வைர விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 hours ago 1

திருச்சி: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டுகளை பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாக திருச்சியில் நடந்த சாரண சாரணியர் இயக்க வைர விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இலங்கை, நேபாளம், சவுதி அரேபியா, மலேசியாவில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன் நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில் திருச்சியில் இருந்து மணப்பாறை சிப்காட் வளாகத்திற்கு காரில் முதல்வர் சென்றார். வழிநெடுகிலும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா அரங்கிற்கு வந்ததும், சாரண, சாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், விழா மலரை வெளியிட்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறை செய்துவரும் திட்டங்களையும் சாதனைகளையும் சொல்வதற்கு இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. எனவே, சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நீக்க, நாம் கொண்டுவந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்தி காட்டினார். அந்த முன்னெடுப்புகளால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

இந்த திட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, கற்றல் மற்றும் பயிற்றுவித்தலை எளிமையாக்க நவீனமாக்க 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கை கணினிகளை வழங்கியிருக்கிறார். 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்திருக்கிறார். 8 ஆயிரத்து 209 ஹைடெக் லேப்கள் அமைத்திருக்கிறார். மாணவர்களின் திறமைகளை அடையாளம் காட்ட, கலை திருவிழா, பன்னாட்டு புத்தக திருவிழா, மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தியிருக்கிறார்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வெளியுலக அனுபவம் கிடைக்க வெளிநாடு பயணங்கள் என அவர் செய்துவரும் பணிகளை சொல்லி கொண்டே போகலாம். நான் சொன்ன சாதனைகளின் மணிமகுடமாகதான் இப்போது, சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா நிகழ்வு நடைபெறுகிறது. இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாட்டிற்கே பெரும் புகழை ஈட்டித்தருகிறது. இந்த புகழ், இந்திய புகழ், இன்னும் சொன்னால், உலகப்புகழ், சாரண சாரணியர் இயக்கம், உலக அளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

நாடு முழுவதும், 80 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் மாணவர்கள். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பங்கு என்பது, எப்போதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மை ஆக்கியிருக்கிறோம். நீங்கள் பங்கு பெற்றிருக்கும் சாரணர் இயக்கம் என்பது, உடலினை உறுதிசெய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதிசெய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது.

உங்கள் எல்லோரையும் இந்த சீருடையில் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன் என்றால், நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது. இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது, நாட்டுப் பற்று என்பது, நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும்.

மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப் பற்று. இப்படி, இளைய தலைமுறையை இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சாரண சாரணியர் இயக்கப் பொன் விழா பெருந்திரளணி நடந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் அன்றைக்கு அதை நடத்திக்காட்டினார். இப்போது வைரவிழா கொண்டாடும்போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். தலைவர் கலைஞர் தான், இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.

தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கியது அவர் தான். எனவே, அவரது நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் அவருடைய முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம்முடைய அன்பின் வலிமை.

விழாவுக்கு வருகை தந்துள்ள வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும், பண்பாட்டையும் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இதைப்போல், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களின் பெருமைகளையும், பண்பாட்டையும் நம்முடைய மாணவ-மாணவியர்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கைப்படி 17 இலக்குகளிலும் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது.

தொடக்க விழாவில் ஒரே இடத்தில் சாரண சாரணியர் இயக்க இறைவணக்க பாடல் நிகழ்வில் அதிக நபர்கள் பங்கேற்றது, ஒரே இடத்தில் சாரண சாரணியர் இயக்கத்தினர் சாரண வணக்கம் தெரிவித்தது என்று 5 பெரும் சாதனைகளை அங்கீகரித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, சாரண சாரணியர் இயக்ககம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு 5 உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியை முடித்து விட்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர், அங்கிருந்து இரவு 7.50 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

* முதல்வருக்கு சாரண, சாரணியர் தேசிய தலைமை ஆணையர் புகழாரம்
விழாவில் பாரத சாரண, சாரணியர் தேசிய தலைமை ஆணையர் கந்தல்வால் பேசுகையில்,‘‘ இந்த ஜம்போரி நிகழ்ச்சி முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மரியாதை அளிக்கும் விதமாக நடந்து வருகிறது. அவர் உலகிற்கான தலைவர். அவரது தமிழ் எழுத்துக்கள் அனைத்து இளைஞர்களையும் ஊக்குவிக்கும்.

இப்போது அவரது வழியில் தமிழ்நாடு முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மக்களுக்காக முதல்வர், உங்கள் தொகுதியில் முதல்வர், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம், நான் முதல்வன் திட்டம், நம்மை காக்கும் 48 போன்ற பல நல்ல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். வைர விழா மிக சிறப்பாக செயல்பட காரணமான முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு நன்றி’’ என்றார்.

* ‘தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கு ரூ.10 கோடியில் புதிய தலைமை அலுவலகம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அங்கு உள்ளவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போன்று அறிவிப்பை நான் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்லாயிரம் மாணவர்கள் கூடியிருக்கும் இந்த இடத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

நம்முடைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையில் மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்’ என்றார்.

The post ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டுகளை பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: சாரணர் வைர விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article