கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதிக்கு வரி விதிப்பு வர்த்தக போரை தொடங்கிய அமெரிக்கா: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பால் உலக பொருளாதாரம் பாதிக்கும் அபாயம்

3 hours ago 1

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன் மூலம் அவர் உலக வர்த்தக போரை தொடங்கி வைத்துள்ளார். டிரம்ப் நடவடிக்கைக்கு கனடா, மெக்சிகோ நாடுகள் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளன. டிரம்பின் இந்த அதிரடி முடிவுகள் அமெரிக்க பொருளாதாரத்தை ஆபத்தில் சிக்க வைப்பதோடு, உலக பொருளாதாரத்தையும் படுகுழியில் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அதிர்ச்சிகரமான நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை முன்னிறுத்தி உள்ள டிரம்ப், தனது பிரசாரத்தின் போதே, அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை மற்றும் பாரபட்சமான வரி விதிப்புகளை முக்கியமாக பேசியிருந்தார். எனவே, ஆட்சிக்கு வந்ததும், தனது முதல் 3 முக்கிய வர்த்தக பங்காளிகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரி விதிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதன்படி, அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதே சமயம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், இயற்கை வாயு, மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு மட்டும் 10 சதவீத வரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்கர்களை பாதுகாக்க இந்த வரிகள் அவசியம்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை கனடாவும், மெக்சிகோவும் குறைக்க வேண்டும். எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலையும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகவே இந்த வரிவிதிப்பு. தேவைப்படும் பட்சத்தில் இந்த வரியை மேலும் உயர்த்த தயங்க மாட்டோம்’’ என எச்சரித்துள்ளார். இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ள டிரம்ப், உலகளாவிய வர்த்தக போரை தொடங்கி வைத்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் கனடாவும், மெக்சிகோவும் சரியான பதிலடி கொடுத்துள்ளன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், ‘‘வெள்ளை மாளிகை எடுத்துள்ள முடிவு நம்மை ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிரித்து விட்டன. கலிபோர்னியா காட்டுத் தீ, ஆப்கானிஸ்தான் யுத்தம், கத்ரீனா புயல் என பல இக்கட்டான தருணங்களில் கனடா மக்கள் அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது கனேடியர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கிறோம். இதில் அமெரிக்க மதுபானங்கள், பழங்களும் அடங்கும்.

கனடா மக்களுக்கு இது இக்கட்டான காலகட்டம். எனினும் நீங்கள் கனடா பொருட்களை வாங்கி உபயோகிக்க முன்னுரிமை கொடுங்கள்’’ என்றார்.இதே போல மெக்சிகோ அதிபர் கிளாடியா சியின்பாம் அளித்த பேட்டியில், ‘‘சமூகவிரோத கும்பலுடன் மெக்சிகன் அரசு கூட்டணி வைத்துள்ளது என்ற வெள்ளை மாளிகையின் அவதூறை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அதே போல் எங்கள் பிரதேசத்தில் தலையிடும் எந்தவொரு நோக்கத்தையும் நிராகரிக்கிறோம்.

இந்த நேரத்தில் மெக்சிகோவின் நலன்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுக்கு பதிலடி வரிகளை விதிக்க பொருளாதார அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்கா முதலில் தனது நாட்டிற்குள் எளிதாக போதைப்பொருள் கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதை செய்யாமல், பிறர் மீது பழிபோடுவது அநியாயம்’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, சீனா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த வரி விதிப்புகள் நீடித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கனடா, மெக்சிகோவுடன் சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை விதிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் மிக மோசமடையக்கூடும். அதன் காரணமாக, உணவு பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வீட்டுவசதி, போக்குவரத்து விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாகத்தான் முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி மீது அமெரிக்கர்கள் கோபமடைந்தனர். தற்போது டிரம்ப் அதை விட மோசமான கட்டத்திற்கு அமெரிக்காவை கொண்டு செல்லும் விபரீத நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் பட்சத்தில் அது உலக பொருளாதாரத்தையும் படுகுழியில் வீழ்த்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

* அமெரிக்க மது வகைகளுக்குதடை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிரதமர் டேவிட் எபி நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘அமெரிக்கா மதுபானங்களை வாங்குவதை கனடா மக்கள் நிறுத்த வேண்டும். அரசு விற்பனை நிலையங்களில் அமெரிக்க மதுபான பிராண்டுகள் அகற்றப்படும்’’ என்றார்.

* ‘பாதிப்பு ஏற்படும்’ஒப்புக்கொண்ட டிரம்ப்
மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பு அமெரிக்க மக்களுக்கே எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது சமூக ஊடக பதிவில், ‘‘பாதிப்பு ஏற்படலாம், இல்லாமலும் போகலாம். ஆனாலும் நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். அதற்காக பொருளாதார சுமையால் ஏற்படும் வலிக்கு செலுத்தும் விலையும் தகுதியானதுதான்’’ என கூறி உள்ளார். மேலும், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

* முதல் 3 இடத்தில்…
அமெரிக்காவின் பெட்ரோலிய தேவையில் 60 சதவீதத்தை கனடா தான் பூர்த்தி செய்கிறது. கனடாவிடமிருந்து கனிமங்கள், போக்குவரத்து உபகரணங்கள், கெமிக்கல், பிளாஸ்டிக், தோல் பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இதனால் கனடா வரி விதிப்பதால் அமெரிக்காவில் இப்பொருட்களின் விலை அதிகரிக்கும். அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளில் கனடா, மெக்சிகோ, சீனா முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 9வது இடத்தில் உள்ளது.

குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் கூடுதல் செலவாகும்
அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உத்தரவு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனடா, மெக்சிகோ விதிக்கும் பதில் வரியால் அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக ரூ.99,800 கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும் என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறையும், பணவீக்கம் மோசமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

* நாடுகள் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக பற்றாக்குறை
கனடா ரூ.26 லட்சம் கோடி ரூ.31 லட்சம் கோடி ரூ.5 லட்சம் கோடி
மெக்சிகோ ரூ.23 லட்சம் கோடி ரூ.33 லட்சம் கோடி ரூ.10 லட்சம் கோடி
சீனா ரூ.13 லட்சம் கோடி ரூ.43 லட்சம் கோடி ரூ.30 லட்சம் கோடி
இந்தியா ரூ.3.5 லட்சம் கோடி ரூ.6.2 லட்சம் கோடி ரூ.2.7 லட்சம் கோடி

The post கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதிக்கு வரி விதிப்பு வர்த்தக போரை தொடங்கிய அமெரிக்கா: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பால் உலக பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article