கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

3 hours ago 3

கோவை,

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காக் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது 5.25 கிலோ உயர்ரக கஞ்சாவை பயணி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக அதை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article