![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38369917-3.webp)
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வெளியேறி உலா வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று படுத்து ஓய்வெடுத்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை கண்காணித்து, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.