கோவை: அரசு மருத்துவமனை பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து ரசித்த டாக்டரை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (33). கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். முதுநிலை பட்டப்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற வெங்கடேசன், அங்குள்ள பெண்கள் கழிவறையில் பேனா கேமராவை பொருத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி, செவிலியர் பயிற்சி மாணவி, பொது கழிவறைக்கு சென்றார். அங்கு, கழிவறையை சுத்தம் செய்ய கூடிய பிரஷில் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட நிலையில் ரகசிய பேனா கேமரா இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியுடன், பேனா கேமராவை எடுத்து கொண்டு வெளியே வந்தார். அந்த பகுதியில் நின்ற வெங்கடேசனிடம் விவரத்தை கூறினார். பின்னர் அந்த பேனா கேமராவை வாங்கிவிட்டு விசாரிப்பதாக கூறி அந்த மாணவியை அனுப்பி வைத்தார். மறுநாள் வெங்கடேசன் பணிக்கு செல்லவில்லை. இதனால் அந்த மாணவி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
உடனே மருத்துவமனையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வெங்கடேசன், அந்த கழிவறைக்கு சென்று வருவது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரை அழைத்து விசாரித்த போது, ரகசிய கேமராவை வைத்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் ஸ்டேசனில் டாக்டர் ராஜா புகார் கொடுத்தார். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மெமரிகார்டு ஆகியவற்றை கைப்பற்றினர். இந்நிலையில் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா உத்தரவிட்டார்.
The post கோவை ஜி.ஹெச் பெண்கள் கழிவறையில் கேமரா வைத்த டாக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.