கோவை சிறைக்குள் ஆயுள் கைதி கொலை: 10 பேரிடம் விசாரணை

1 week ago 3

கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் ஆயுள் கைதி அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 10 பேரிடம் விசாரணை நடக்கிறது. நெல்லை மாவட்டம் சுந்தராபுரம் பால் பண்ணை வீதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (33). 2012ல் திருப்பூரில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் 2016 முதல் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் கடந்த மாதம் 27ம் தேதி மதியம் சிறை வளாகத்தில் உள்ள தொழிற்கூடத்தில் வேலை செய்துள்ளார். அப்போது அங்குள்ள கழிவறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில், அவரது கழுத்து எழும்பு உடைந்து இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து துணை சிறை அலுவலர் மனோ ரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், முதல் நிலை தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டார். இதற்கிடையே கோவை ஜேஎம் 3 மாஜிஸ்திரேட் கிருத்திகா நேற்று முன்தினம் சிறையில் விசாரணை நடத்தினார். இந்நிலையில், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சிறைக்குள் நடந்த மோதலில் ஏசுதாசை சிலர் அடித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கைதிகள் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை சிறைக்குள் ஆயுள் கைதி கொலை: 10 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article