
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் (27.04.2025) கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில் கோவில்பட்டி கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (வயது 23), கயத்தாறு நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கொம்பையாபாண்டியன் (21), கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா (19) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (20) ஆகியோர் இருந்ததும், அவர்கள் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ 720 கிராம் கஞ்சா, ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.