
தென்காசி,
தென்காசி மாவட்டம் தோரணமலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை கொண்டாட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கோடை கொண்டாட்டம் நடந்து வருகிறது. இன்றும் (18.5.2025) கோடை கொண்டாட்டம் அமர்களப்பட்டது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மலையேறும் பக்தர்கள் காலையிலேயே தோரணமலைக்கு வருகை தருவார்கள். இன்று கோடை விழாவை கொண்டாட மாணவ-மாணவிகள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் கோவில் வளாகம் களைகட்டியது.
காலை எட்டு மணிக்கு மாணவர்கள் தங்கள் திறமையை காட்டித்தொடங்கினார்கள். முதலில் சிறுவர்-சிறுமியர் திருக்குறளை ஒப்புவித்தனர். இதனை அடுத்து கயத்தாறில் இருந்து வந்த மாணவ- மாணவிகள் யோகா மற்றம் நடனம் நிகழ்ச்சி நடத்தினார்கள். இதனை அடுத்து கடையத்தில் இருந்த வந்த விவி ஸ்போட்ஸ் குழுவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கராத்தே மற்றும் வாள்பயிற்சி செய்து காட்டினர்.
தொடர்ந்து, ஆலங்குளம் ரெட்டியார்பட்டி, கழநீர்குளம், ஓடை மறிச்சான் பகுதியைச் சேர்ந்தவர்கள் யோகா மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சி செய்து காட்டி பொதுமக்களை வியக்க வைத்தனர். அதன்பின்னர் பூலாங்குளம் சிலம்பம் குழுவினர் சிலம்பம் ஆடினர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பாரம்பரிய விளையாட்டான பம்பரம், கோலி விளையாடினார்கள். அவர்களுக்கு அந்த கால தின்பண்டமான கடலை மிட்டாய் வகைகள் மற்றும் இயற்கை குளிர்பானம் கொடுக்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் பரிமாறப்பட்டது. இன்று கோவிலுக்கு வந்த மாணவ-மாணவிகள் பலர் அங்குள்ள நூல் நிலையத்திற்கு சென்று படித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.